கலவை: ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த ஆரூர் கிராமத்தை சேர்ந்தவர் அசோகன், விவசாயி. இவருக்கு மனைவி மற்றும் 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவர்களில் 2வது மகள் யுவஸ்ரீ (13), அங்குள்ள பள்ளியில் 8ம் வகுப்பும், 3வது மகள் பிரியங்கா (12), ஆறாம் வகுப்பு படித்து வந்தனர்.அதே பகுதியை சேர்ந்த விவசாயி வெங்கடேசன் மகள் 8ம் வகுப்பு மாணவி பிரியா (13). தோழிகளான மூவரும் பள்ளி விடுமுறை என்பதால் அங்குள்ள விவசாய கிணற்றில் துணி துவைப்பதற்காக நேற்று மாலை 4 மணியளவில் சென்றுள்ளனர்.
அப்போது யுவஸ்ரீ திடீரென கிணற்றில் தவறி விழுந்துள்ளார். அதிர்ச்சியடைந்த சகோதரி பிரியங்கா மற்றும் தோழி பிரியா ஆகிய இருவரும் கிணற்றில் குதித்து அவரை மீட்க முயன்றனர். மூவருக்கும் நீச்சல் தெரியாததால் அடுத்தடுத்து நீரில் மூழ்கி பலியாகினர். நீண்ட நேரமாகியும் 3 சிறுமிகளும் வீடு திரும்பாததால் பெற்றோர் தேடிச்சென்றனர். கிணற்றின் கரையில் துணிகள் கிடந்தது தெரிந்து அதிர்ச்சி அடைந்தனர். புகாரின்படி வாழைப்பந்தல் போலீசார், கலவை தீயணைப்புத்துறையினர் வந்து மின்விளக்குகளை அமைத்து சுமார் 2 மணிநேரம் போராடி சடலங்களை மீட்டனர்.
