×

சமயபுரத்துக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் கூட்டத்தில் கார் பாய்ந்து 4 பெண்கள் பலி

பெரம்பலூர்: தைப்பூசத்தையொட்டி கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அடுத்த தொளார்குடிகாடு கிராமத்தை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட ஆண், பெண் பக்தர்கள் கடந்த 28ம்தேதி திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரையாக புறப்பட்டனர். அதேபோல் சேலத்தில் இருந்தும் ஒரு குழுவினர் சமயபுரத்துக்கு பாதயாத்திரையாக வந்தனர். இந்த குழுவில் ஆண், பெண் என 60 பேர் இருந்தனர். இவர்கள் ஒரே குழுவாக இணைந்து நேற்று (31ம்தேதி) அதிகாலை 5 மணி அளவில் பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் மேம்பாலம் தாண்டி சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது சென்னையில் இருந்து திருச்சிக்கு அதிவேகமாக வந்த கார், திடீரென தாறுமாறாக சென்று பக்தர்கள் கூட்டத்தில் பாய்ந்து தடுப்பு கட்டையில் மோதி நின்றது.

இதில், கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அடுத்த தொளார்குடிகாடு கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி மலர்க்கொடி (35), திருநாவுக்கரசு மனைவி சசிகலா(47), மற்றொரு சுப்பிரமணியன் மனைவி விஜயலட்சுமி(40) ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பரமசிவம் மனைவி ஜோதிலட்சுமி(57), சேலம் மாவட்டம் கெங்கவல்லியை சேர்ந்த மருதமுத்து மனைவி சித்ரா(40) ஆகியோரை பலத்த காயத்துடன் ரோந்து போலீசார் மீட்டு பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், வழியிலேயே சித்ரா உயிரிழந்தார். ஜோதிலட்சுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து, காரை அதிவேகமாக ஓட்டி விபத்தை ஏற்படுத்திய சென்னை திரிசூலம் ஈஸ்வரன் கோயில் தெருவை சேர்ந்த சுரேஷ் மகன் கவுதம் (24) என்பவரை கைது செய்தனர்.

Tags : Samayapuram ,Perambalur ,Thaipusam ,Tolarkudikadu ,Pennadam ,Cuddalore district ,Samayapuram Mariamman temple ,Trichy district ,Salem ,Samayapuram… ,
× RELATED புதுவை தினகரன், விஐடி பல்கலைக்கழகம்...