ஆன்மிகம் என்பது அற்புதமான அனுபவம் (INNER EXPERIENCE). சமயம் என்பது ஆன்மிகத்தைப் புரிந்து கொள்வதற்கான ஒரு வழிமுறை. ஒரு அதிகாரி. கோபம் பொசுக்கென்று வரும். அலுவலகத்தில், குடும்பத்தில், உறவுகளில் சிடுசிடு வென இருப்பார். ஆனால், கோயிலுக்குப் போவார். அனுஷ்டானங்களை விடமாட்டார். ஈவு இரக்கம் இருக்காது.சமய அறிவு உடையவர்கள்கூட ஆன்மிக உணர்வு இல்லாதவர்களாக இருப்பார்கள். ஒருவர் வைணவராகவோ, சைவராகவோ, வேறு சமய நெறி சார்ந்தவராகவோ இருக்கலாம். ஆனால், சமய நெறிக்குள் இருக்கக்கூடிய ஆன்மிகத்தைப் புரிந்து கொள்ளவில்லை அல்லது பின்பற்றவில்லை என்று இருந்தால், அந்த சமயம் அவருக்கு எவ்விதத்திலும்
பயன்படாது.
சமய நூல்களை படித்திருந்தால், அதைப் பற்றி விளக்குவதில் ஆர்வமும் ஆற்றலும் இருக்கும். ஆனால், அதன் ஆத்மாவாகிய ஆன்மிகத்தைப் புரிந்து கொண்டு, பின்பற்ற முடியவில்லை என்று சொன்னால், பிரயோஜனம் இல்லை. கேட்பவர்கள் சுவாரஸ்யமாகக் கேட்பார்களே தவிர, மனதில் தைக்காது. சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்தாது. பேசுபவர்களுக்கு பிரபல்யத்தையும் செல்வத்தையும் வேண்டுமானால் அள்ளி வழங்கலாம். சமயம் என்பது ஒரு பெட்டி. ஆன்மிகம் என்பது அந்தப் பெட்டியில் இருக்கக்கூடிய சாஸ்வதமான பொருள். பெட்டி முக்கியம்தான் என்றாலும்கூட, பெட்டியைவிட பொருள் முக்கியம். பொருளைக் காப்பாற்றுவதற்காகத் தான் பெட்டியையும் நாம் போற்றுகின்றோம். சமய நெறி போற்றப்படுவதற்கும் பின்பற்றப்படுவதற்கும் அது காட்டும் பொருள்தான் முக்கியம். ஒரு சின்ன உதாரணம் சைவத்தைப் பின்பற்றுகின்றார் ஒருவர். சைவத்தின் அடிப்படையான விஷயத்தைக் கேட்டால், “சிவப் பரம் பொருள்தான் முழு முதல் கடவுள். அவரையே நம்புகின்றோம். அதற்கான வழிமுறைகளாகிய தேவார திருவாசகங்களைப் பாடுவது, விபூதி அணிவது, சிவன் கோயில்களில் சென்று வழிபடுவது, சிவனுக்குரிய விரதங்களைப் பின்பற்றுவது என இப்படிச் செய்கின்றோம்’’ என்பார்.
இது சரிதான். இதில் ஒரு தவறும் கிடையாது. ஆனால், அந்த சிவன் எப்படிப்பட்டவன்? அவனுடைய குணம் என்ன என்று சொன்னால் ஒரே வரியில் சொல்லிவிடலாம். அன்புதான் சிவன். எந்தெந்த இடத்திலே அன்பு பிரவாகமாக இருக்கிறதோ, அந்த இடத்திலே சிவபெருமான் இருக்கிறார். (அன்பெனும் பிடியில் அகப்படும் மலையே)ஒரு வைணவரிடத்திலே இதே கேள்வியைக் கேட்டால் அவர், “மகாவிஷ்ணுதான் பரம்பொருள்’’ என்று பலபடியாகச் சொல்லுவார். வைணவ நெறியின் அடிப்படையான விஷயம் அதுதான். ஆனால், ஒரு வைணவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நஞ்சீயர், ஒரு விளக்கத்தைத் தருகின்றார். “எவர் மனதிலே பிறருடைய துன்பங்களைக் கண்டு இயல்பாகவே இரக்கம் பிறக்கிறதோ அவர் வைணவன்’’ என்கின்றார். இதை இப்படி எடுத்துக் கொள்ளலாம். எப்படி அன்பே சிவம் என்று சைவர்கள் எடுத்துக் கொள்கின்றார்களோ, அதைப் போலவே அன்பே வைணவம் என்று வைணவர்கள் எடுத்துக் கொள்கின்றார்கள். இங்கே சிவபெருமான் பரம்பொருளாக, வழிபடக்கூடிய கடவுளாக இருக்கிறார் என்பது சைவ நெறியின் அடிப்படைத் தத்துவமாகவும், மகாவிஷ்ணுவே பரம்பொருளாகவும் வைணவர்கள் வழிபடக்கூடிய கடவுளாகவும் இருக்கிறார் என்பது வைணவத்தின் அடிப்படைத் தத்துவமாக இருந்தாலும்கூட இரண்டும் பொதுவான ஒரு விஷயத்தை சுட்டிக் காட்டுகின்றது. அதுதான் உயிர்களிடத்திலே அன்பு.
தினசரி சங்கல்பம் சொல்கின்ற பொழுது, ஸ்மார்த்தர்களும் வைணவர்களும் “சர்வம் விஷ்ணுமயம் ஜகத்’’ என்று சொல்லி முடிப்பார்கள். சிவகோத்திரத்தைச் சார்ந்தவர்கள், “சர்வம் சிவமயம் ஜகத்’’ (இந்த உலகங்கள் எல்லாம் சிவபெருமான் வடிவமாகவே இருக்கின்றன) என்று சங்கல்பம் சொல்வார்கள். ஆனால், இதை நாம் மனப்பூர்வமாகச் சொல்லுகின்றோமா, இல்லை உதட்டில் இருந்து சொல்லுகிறோமா என்பது முக்கியம். ஒரு மந்திரமோ, தியானமோ முழுமையான பலனைத் தரவேண்டும் என்றால், அதற்குத் திரிகரண சுத்தி அவசியம். (மனம், மொழி, மெய்) அதனால்தான் எந்த விஷயம் செய்யும் பொழுதும், மனதை ஒரு நிலையிலே நிறுத்துவதற்காக பிராணாயாமத்தைச் செய்துவிட்டு மந்திரப் பிரயோகங்களைச் செய்வார்கள். அப்படிச் செய்யும் பொழுது, மந்திரத்தினுடைய வீரியம் பன் மடங்காக இருக்கும் நாம் எதிர்பார்த்த பலனைத் தரும். சர்வம் விஷ்ணு மயம் ஜகத், சர்வம் சிவமயம் ஜகத் என்று சொல்வது சரிதான். ஆனால், நடைமுறையில் நாம் இதை எப்படிப் பின்பற்றுகிறோம் என்பது முக்கியம். ஆன்மிகத்துக்கு பொருத்தமாக, இணக்கமாக, நம்முடைய சடங்குகள் இருக்கும் வரை, அந்தச் சடங்குகளால் நமக்கு ஆத்ம உஜ்ஜீவனம் கிடைக்கும். நம்முடைய ஆன்மா பலப்படும். நாம் சொல்வது நடக்கும். நம்முடைய பிரார்த்தனைகள் பலிக்கும்.
இதனைத்தான், ஆன்ம பலம் (SPIRITUAL POWER) என்பார்கள். அதற்குள்தான் சடங்குகள் (RITUAL) இருக்கின்றன. ஆனால், அந்தச் சடங்குகளுக்குள் ஆன்ம விஷயத்தைப் புகுத்தவில்லை என்று சொன்னால், அதில் உள்ள ஆன்மா (SPIRIT) விலகி வெறும் சடங்காகவே (RITUAL) இருக்கும். சமீபத்தில் திருப்பாவை உபன்யாசம் செய்த பொழுது, ஒரு செய்தியைச் சொன்னேன். பகவான் வரவில்லை வரவில்லை என்றெல்லாம் சொல்லுகின்றோமே, யோசித்துப் பாருங்கள், பகவான் வரவில்லை என்று நாம் எப்படி சொல்லுகின்றோம்? ஒரு பெரிய ஆன்மிகச் சொற்பொழிவுக்கு பகவானே வந்து உட்கார்ந்தாலும், இவர் பகவான்தான் என்பதைத் தெரிந்து கொள்ளுகின்ற ஆற்றல் நிஜமாகவே நமக்கு இருக்கிறதா? சோமாசிமாற நாயனார் வரலாற்றிலே பரிந்துரைத்த சுந்தர மூர்த்தி ஸ்வாமிகளிடம் சிவபெருமான் சொல்லுகின்றார்;
“சோமாசிமாற நாயனாரிடத்திலே நேரடியாக “நிறை அவி’’ (பூர்ணாகுதி) பெறுவதற்கு நான் செல்கின்றேன். ஆனால், என்னை அவர் புரிந்து கொள்ள வேண்டும்’’ என்றார். அங்கே இருக்கக் கூடிய வைதிகர்கள் எல்லாம் யாரோ ஒரு வேடன் ஆசாரக் குறைவோடு இங்கே வருகிறார் என்று ஓடிய பொழுது “வந்திருப்பவர் சாட்சாத் அந்த சிவபெருமான்தான்’’ என்று சோமாசி மாற நாயனார் புரிந்துகொண்டார். வேதம் படித்த வைதிகர்களுக்கே வந்திருப்பது சிவபெருமான் என்று தெரியாத பொழுது, நம்மைப் போன்ற சாதாரண மக்களால் எப்படி பகவான் என்று புரிந்து கொள்ள முடியும்? “சங்கு சக்கர கதாபாணி’’ என்று புராணம் மஹாவிஷ்ணுவை வர்ணிக்கிறது. இப்பொழுது ஒருவர் சங்கு சக்கர கதை தரித்து பஞ்சாயதங்களோடு வந்தால், அவர் மகாவிஷ்ணு என்று எப்படி நாம் தெரிந்துகொள்ள முடியும்? ஏதோ நாடக அரங்கில் இருந்து வேஷம் கலைக்காமல் வந்திருக்கிறார் என்று தானே நினைத்துக் கொள்வோம். அப்படியானால் நமக்கு இறைவனே நேரில் வந்தாலும் புரிந்துகொள்ள முடியாது.
அவர் ஆடு மாடாகக்கூட வரலாம். பாம்பாக வரலாம். பரதேசியாக வரலாம். குழந்தையாக வரலாம். எப்படி வந்தாலும் நம்மால் அவரைப் புரிந்து கொள்ள முடியாது. இப்பொழுதுதான் சர்வம் விஷ்ணு மயம் ஜகத் என்ற வார்த்தையின் அர்த்தம் வருகிறது. எப்பொழுது நம்மால் தனித்து இவர்தான் இறைவன் என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லையோ, அப்படியானால் இறைவனைப் புரிந்து கொள்வதற்கு ஒரு வழி வேண்டும் அல்லவா! அதுதான் சர்வம் விஷ்ணு மயம் ஜகத். எல்லாவற்றையும் இறைவனாக நினைப்பதுதான் சர்வ விஷ்ணு மயம் ஜகத் என்று பெரியவர்கள் சொன்னார்கள். நிஜ ஆன்மிகம் என்பது இதைப் புரிந்துகொண்டு பின்பற்றுவதுதான்.
