சென்ற இதழ் தொடர்ச்சி
109. மஹா சக்தி
110. குண்டலிநீ
111. பிஸதந்து தநீயஸீ
– என்கிற மூன்று நாமங்களை சேர்த்து பார்த்துக் கொண்டே வருகிறோம்.
இப்போது யோகத்தினுடைய எல்லை எது? ஞானம். ஞானத்தினுடைய எல்லை எது? யோகம். யோகத்தில் தொடங்கி ஞானத்தில் முடிவடைகின்றது. இதைக் காண்பிப்பதற்காகத்தான் நாம் ஈஸ்வரனையும் அம்பாளையும் சொல்லிவிட்டு, இவர்களுக்கு புத்திரர்களாக விநாயகரையும் முருகனையும் சொல்கிறோம். ஒரு விஷயத்தைத் தொடங்கினால் விநாயகரிடம் தொடங்குவோம். பிறகு, சுவாமியையும் முருகனையும் தரிசிப்போம். இதுதான் வழக்கம். இந்த வழக்கமே நமக்கு ஒரு விஷயத்தை காண்பித்துக் கொடுக்கிறது. யோகத்தில் ஒரு விஷயத்தை ஆரம்பித்து ஞானத்தில் முடிக்கிறோம். யோகம் என்பது விநாயகரின் சொரூபம். ஞானம் என்பது முருகனுடைய சொரூபம். யோகம் என்கிற விநாயகரில் ஆரம்பித்து, சஹஸ்ராரத்தில் சிவசக்தி ஐக்கிய தரிசனமாகி, ஞானம் என்கிற முருகப் பெருமானிடம் சென்று நிறைவாகின்றது. நாம் ஒரு கோயிலுக்குச் சென்று சாதாரணமாக தரிசனம் செய்கிறோம். ஆனால், அதற்குள் இவ்வளவு பெரிய தத்துவத்தை வைத்திருக்கிறார்கள்.
சாதனை என்பது யோகத்தில் தொடங்குகிறது. விநாயகரில் தொடங்குகிறது. சிவசக்தி தரிசனமாகும். ஜீவாத்ம பரமாத்ம அபேதம் தெரியும். சுவாமியையும் அம்பாளையும் தரிசனம் செய்யும்போது ஜீவ, பிரம்ம ஐக்கியம் தெரியும். அந்த ஜீவ பிரம்ம ஐக்கியம் எது என்று பார்த்தால், ஞான தரிசனமாகும். அந்த ஞான தரிசனமே முருக தரிசனமாகும். இப்போது விஷயத்திற்கு வருவோம். நமக்குள் உள்ள அந்த மஹாசக்திக்கு குண்டலிநீ என்கிற நாமம் என்று வசின்யாதி வாக் தேவதைகள் சொல்கிறார்கள். இப்படி காண்பித்துக் கொடுத்து விட்டு இன்னொரு விஷயத்தையும் சொல்கிறார்கள். இப்படி குண்டலிநீயாக அம்பாள் இருக்கிறாள் அல்லவா? அவளுடைய உருவம் என்ன? என்பதை அடுத்த நாமத்தில் சொல்கிறாள்.
எப்படி குண்டலிநீ இருக்கிறது எனில், பிஸதந்து தநீயஸீ என்கிறாள். ஒரு தாமரை பூவை எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கு தண்டு இருக்கும். அந்த தண்டை ஒடித்தோம் எனில், அதற்குள் நூல் நூலாக இருக்கும். சிலசமயம் அதை ஒடித்து அதைத் திரித்து அதை திரியாகச் செய்வார்கள். அந்த திரியால் விளக்கேற்றுதல் என்கிற சம்பிரதாயமும் உண்டு. இது மஹாலட்சுமிக்கு மிகவும் உகந்ததாகும். இப்படி தாமரை தண்டை பிரித்தால் நூல் நூலாக இருப்பதுபோல் சூட்சுமமாக குண்டலிநீ இருக்கிறாள். எவ்வளவு சூட்சுமமாக விவரிக்கிறார்கள் பாருங்கள். நாம் தாமரையை எடுத்துக் கொண்டு ஆராய்ந்தால் இந்த நுண்ணியத்துவமான நூலை காணலாம். அப்படி இருக்கிறாளாம் அந்த குண்டலிநீ எனும் மஹாசக்தி. இப்போது மீண்டும் பாருங்கள்.
அவள் மகாசக்தி. அவள் நமக்குள் இருக்கும்போது அவளுக்கு குண்டலிநீ என்று பெயர். அப்படி குண்டலிநீயாக இருப்பவளின் ரூபம் எதுவெனில் தாமரை தண்டிலிருந்து இருக்கும் நூல் மாதிரி சூட்சுமமான ரூபம்.இது வேதத்தில் நாராயண சூக்தத்தில் வருகின்றது. நீவார சூகவத் தன்வீ பீதா… என்று தொடங்குகிறது.அந்த நாராயண சூக்த வாக்கியம் என்ன சொல்கிறதெனில், ஒரு நெல் இருக்கிறது. அந்த நெல்லினுடைய நுனியளவு இருக்கக் கூடிய ஒரு நெருப்பு போன்ற ஒளி நமக்குள் இருக்கிற இருதய ஸ்தானத்தில் இருக்கிறது. அந்த இருதய ஸ்தானத்தில் நெல் நுனியளவு இருக்கக் கூடிய அளவுதான் பரமாத்மா என்று வேதம் சொல்கிறது. அதாவது, நாராயண சூக்தம் சொல்கிறது. நாராயண சூக்தம், எப்படி நெல் நுனிபோல பரமாத்மா இருக்கிறாரென்று பரமாத்மாவின் சூட்சுமத்தை சொல்கின்றது.
இந்த நாமத்தில் தாமரையில் இருக்கக்கூடிய தண்டிலுள்ள நூல் போன்ற குண்டலிநீ என்கிற மகாசக்தி என்று வசின்யாதி வாக் தேவதைகள் காண்பிக்கின்றனர். பிஸதந்து தநீயஸீ என்கிற நாமத்தில் தாவரவியல் (botany) இருக்கிறது. தாமரை எப்படி இருக்கிறது என்று யோசிக்க வேண்டும். ஒரு தாமரை ஒரு தடாகத்தில் பூத்திருக்கிறது. பூத்திருக்கக் கூடிய தாமரை மட்டும்தான் நமக்குத் தெரியும். அந்த தாமரைக்கு கீழே பெரிய தண்டு இருக்கும். அந்த தண்டினுடைய கீழேபோய் அந்த தடாகத்தில், கீழ் பகுதியில் மண்ணில் இந்த தண்டுபோய் பதிந்திருக்கும். அந்த மண்ணுக்குள் ஒரு கிழங்கு இருக்கும். அந்தக் கிழங்கிலிருந்து இந்தத் தண்டு உருவாகி, மேலே வந்து தாமரை பூத்திருக்கும். அந்த தாமரைக்கு பக்கத்தில் இரண்டு பக்கங்களிலும் இரண்டு இலைகள் இருக்கும். இப்போது இந்த இடத்தில் இதை அப்படியே கற்பனை செய்து கொள்ளுங்கள். ஏனெனில், இங்கு பிஸதந்து தநீயஸீ என்று சொல்வதில் ஒரு சூட்சுமம் இருக்கிறது. ஏனெனில், இந்தத் தாமரையினுடைய வடிவம் இருக்கிறதல்லவா… இது அப்படியே நம்முடைய உடலினுடைய அமைப்பாகும்.
தாமரைக்கு கீழே இருக்கிற, அந்த நிலத்தில் பதிந்து இருக்கிற அந்த கிழங்கு மூலாதாரம். அந்தக் கிழங்கிலிருந்து அந்தத் தண்டு மேல்நோக்கிப் போகிறது. அந்த மேல்நோக்கிப் போகிற நமது தண்டு சரீரம். இரண்டு பக்கமும் இருக்கக் கூடிய இரண்டு இலைகளும் இரண்டு கண்களும் புருவங்களுமாகும். அந்த புருவ மத்தியில் இருக்கக் கூடிய ஆக்ஞா. அதற்கு மேலே பூத்திருக்கக் கூடிய தாமரை சஹஸ்ராரம். நம்முடைய யோக சரீரத்தினுடைய அமைப்புதான் தாமரையின் அமைப்பு. அதனால்தான் தாமரையும் யோகமும் அடிக்கடி தொடர்புடையதாகவே சொல்லப்படுகின்றது. உள்ளே இருக்கக்கூடிய சக்கரங்களைப்பற்றி சொல்லும்போது பத்மம் என்றுதான் சொல்லுவோம். கமலம், பத்மம், குமுதம் என்றுதானே சொல்லுவோம். மூலாதார பத்மம் என்றுதானே சொல்வோம். சஹஸ்ரார கமலம் என்றுதானே சொல்லுவோம். தாமரை என்றாலே அது எப்போதும் யோகத்தோடு தொடர்பு கொண்டபடியே இருக்கும். ஏனெனில், தாமரையினுடைய அமைப்பு நம்முடைய யோக சரீரத்தினுடைய அமைப்பு.
இப்போது இந்த தாமரை எப்படி மலர்கிறது? இந்தத் தாமரைக்குள் நூல் இருக்கிறதல்லவா? அந்த நூல் வழியாகத்தான் நீர் ஆகட்டும், அந்த தாமரைக்கு வேண்டிய சத்து எல்லாமே அந்த நூல் வழியாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது. இப்போது அம்பிகையும் அதேபோல் நமக்குள் நூல்போன்று இருப்பதினால், நமக்குத் தேவையான சக்தி கூட அவள் வழியாகத்தான் வருகின்றது. நம்முடைய தினசரி வாழ்வில் உபயோகப்படுத்தும் சக்தியிலிருந்து தொடங்கி, யோக மார்க்கத்தில் இந்த குண்டலிநீயை கொண்டுபோய் ஜீவப் பிரம்ம ஐக்கியம் வரையிலான சஹஸ்ராரத்தில் கொண்டுபோய் சேர்க்கக் கூடிய பெரிய சக்தி வரை இதுவே செய்கிறது. அதாவது அம்பாளாக குண்டலிநீ ரூபமாகவே இருந்து கொடுக்கிறாள். சட்டென்று இதையே நம்முடைய சரீரத்தில் இதைச் சுட்டிக்காட்ட முடியுமெனில் செய்ய இயலாது. ஆனால், தாமரை இலையை உதாரணமாகக் கொண்டு வசின்யாதி வாக் தேவதைகள் விளக்குகிறார்கள்.
இந்த மூன்று நாமங்களையும் ஒரு ஆசிரியர் எப்படி படம் வரைந்து பாடம் நடத்துவார்களோ அதுபோல வாக் தேவதைகள் நம்முடைய யோக சரீரத்தையும் தாமரையையும் அதன் தண்டையும் அதன் மத்தியிலுள்ள நூலையும் கொண்டு பாடம் நடத்துகிறார்கள். யோக மார்க்கத்தில் கொஞ்சம் முன்னேறினால்தான் இந்தச் சக்கரங்களே நமக்குத் தெரிய வரும். அதனால்தான் என்ன செய்கிறாளெனில், தாமரைப்பூ வழியாக இந்த விஷயத்தை காண்பித்துக் கொடுக்கிறாள். இந்த மூன்றும் கவித்துவமான நாமங்களாகும். அழகிய தாமரை வழியே சூட்சுமமான விஷயங்களை விளக்குகிறாள். இங்கு தாமரைக்குள் பார்ப்பது என்பது சரீரத்திற்குள் பார்ப்பது என்பதுதான் விஷயம். அதை introspection ஆக காண்பித்துக் கொடுகிறாள். Introspection என்பது self introspection மட்டும் கிடையாது. சரீரத்திற்குள் நடக்கின்ற விஷயங்கள் யாரால் நடக்கின்றது என்று பார்த்தால் அது பகவானால் நடக்கிறது என்பது புரியும். மனதிற்குள் நடக்கின்ற விஷயங்கள் யாரால் நடக்கின்றன என்று பார்த்தால் அதுவும் பகவானால் நடக்கின்றன என்று தெரியும். உள்ளே இருதய ஸ்தானத்தில் யாரால் நடக்கின்றன என்று பார்த்தால் அதுவும் பகவானால்தான் என்று தெரியும்.
Introspection means, body introspection, mind introspection, self introspection என்று மூன்றும் சேர்ந்தது ஆகும். இதைத்தான் இங்கு வாக் தேவதைகள் காண்பித்துக் கொடுக்கிறாள். இந்த நாமங்களுக்கான கோயிலாக தஞ்சாவூருக்கு அருகே பெருமகளூர் எனும் தலம் உள்ளது. அந்த தலத்திலுள்ள சிவனுடைய பெயர் சோமநாதேஸ்வரர் என்று பெயர். அந்த சோமநாதேஸ்வரர் சிவ லிங்கம் எதனால் ஆனது தெரியுமா? தாமரைத் தண்டே இங்கு சிவலிங்கமாக இருக்கிறது. ஈசன் தாமரைத் தண்டினுடைய உருவத்திலேயே தான் இருப்பதாக வெளிப்படுத்துகிறார். அந்த லிங்கம் அப்படியே தாமரைத் தண்டே ஆகும். வெள்ளை நிற தாமரைத் தண்டினால் சதுர வடிவ பீடத்தில் அமைந்துள்ளது. அம்பிகையின் பெயர் சுந்தராம்பிகை அல்லது குந்தளாம்பிகையாகும். இன்னும் ஆச்சரியமான விஷயம் என்னவெனில், செந்தாமரைக் கொடியே இந்த தல விருட்சமும் ஆகும். இந்தப் பெருமகளூர் எனும் தலமானது தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி தாலுக்காவில் அமைந்துள்ளது.
(சுழலும்…)
