பகுதி 4
சென்ற இதழில்…
“டேய்! துஷ்டப் பயலே! என் பேச்சைக் கேட்காமல் இதேபோல் அழுது கொண்டிருந்தால், உன்னை அனந்தன் காட்டில் கொண்டுபோய் விட்டுவிடுவேன்’’ என ஒரு குரல் கேட்டது.
இனி…
குரல் வந்த திசைநோக்கி ஓடினார் வில்வமங்கள். அங்கே மிகவும் அழுக்கோடு பெண்மணி ஒருவர் இருந்தார். அவரைப் பார்த்தவுடன் அவரிடம் நெருங்கிய வில்வமங்கள்,“அம்மா! இப்போது நீ சொன்ன அந்த அனந்தன் காடு எங்கே உள்ளது?’’ எனக் கேட்டார். பெண்மணி வில்வமங்களைப் பார்த்தவுடன் எழுந்து, மரியாதை நிமித்தமாகச் சற்று தள்ளி நின்றபடி, “இங்கிருந்து தெற்குப்பக்கத்தில் இருக்கிறது. நான்கு நாழிகை (96 – நிமிடங்கள்) தூரம். இதோ! இந்தப் பக்கமாகச் சென்றால் அனந்தன் காட்டை அடையலாம்’’ என்றார்.
அதைக் கேட்டு ஆச்சரியமடைந்த வில்வமங்கள், மனமாற அப்பெண்மணியை ஆசீர்வதித்துவிட்டு, அப்பெண்மணி சொன்ன வழியில் விரைவாகச் செல்லத் தொடங்கினார்; அனந்தன் காட்டை அடைந்தார். அங்கே அனந்தன் காட்டில் பெரும்பெரும் மரங்களும் பாம்புகளுமாக இருந்தது. பார்க்கும் அனைத்தையும் பகவானாகவே பார்க்கும் வில்வமங்களுக்கு அந்தக்காடும் ஆனந்தமாகவே இருந்தது. பகவான் சொன்ன இடத்திற்கு வந்து விட்டோம் என்ற எண்ணத்தில், பகவானைத் தியானித்தபடி தன் இரண்டு முழங்கால்களையும் சேர்த்து, அந்த முட்டுக் கால்களில் தன் தலையை வைத்தபடி இருந்தார். அப்போது ஒரு குரல் கேட்டது; பேசியது பகவான்.
“வில்வமங்கள்! எம் அம்சமான அனந்தன் இக்காட்டில் தவம் செய்து கொண்டிருந்தான். ஆகையால் இந்த இடமும் புண்ணியத் தலமாகவே இருந்து வருகிறது. கலியுகத்தில் மக்களுக்கு அருள் புரிவதற்காக, இக்காட்டைப் பாற்கடல் போல் நினைத்து யாம் இங்கே இருக்கிறோம்.“முப்பத்திரண்டாயிரம் வருடங்கள் யாம் இங்கே இருப்போம். இங்கும் பூலோக வைகுண்டமான குருவாயூரிலும் இருக்க வேண்டும் என்னும் பக்தர்களின் பிரார்த்தனைக்காக இங்கும் அங்கும் இருப்போம்.
“இன்று முதல் இங்கே பாற்கடலில் (அனந்தன் காட்டில்) அனந்த சயனனாக இருந்து வருகிறேன். பாற்கடலையும் வைகுண்டத்தையும் உமக்குக் காண்பிப்பதற்காகவே, யாம் உம்மிடம் விளையாட்டுக் குழந்தையாக இருந்தபடி, உமது மிச்ச – சொச்சமான சம்சார பந்தத்தையும் நீக்க வேண்டும் – என்பதற்காகவே உம் முன்னால் இருந்து மறைந்தேன்.
“உமக்கு இனிமேல் சம்சார பந்தம் உண்டாகாது. முக்தனாக இருக்கிறீர் நீர்’’ என்றார் பகவான். அதே சமயம், வில்வமங்கள் கண்ணெதிரில் பாற்கடல் தோன்ற, அதன் கரையில் அவர் இருப்பதாகக் கண்டார். பாற்கடலில் அனந்தசயனத்தில் பகவான் சயனித்திருந்தார். ஸ்ரீதேவியும் பூதேவியும் அவருக்குப் பணிவிடைகள் செய்து கொண்டிருந்தார்கள். நாரதர் முதலான மஹரிஷிகள் பலர் துதிப்பாடல் பாடிக் கொண்டிருந்தார்கள்.
அஞ்சலி செய்தவாறு கருடபகவான், முன்னால் நின்று கொண்டிருந்தார். மஹாவிஷ்ணுவின் வடிவம் கொண்ட பரிவாரங்கள் சுற்றி நின்றிருந்தார்கள். அவை அனைத்தையும் பார்த்து ஆனந்தப்பட்ட வில்வமங்களம், வேத மந்திரங்களால் பகவானைத் துதித்தார்; அனந்தன் காட்டிலும் குருவாயூரிலும் எழுந்தருளியிருப்பது, ஒரே பரம்பொருள் என உணர்ந்து மகிழ்ந்தார். அந்த நிலையிலேயே அங்கே பகவானின் பாதார விந்தங்களில் கலந்தார்.தேவர்கள் மலர்மாரி பொழியதேவமாதர் நடனமாடினார்கள்.
பி.என்.பரசுராமன்
