பகுதி 1
இந்தியாவின் பழமையான வேதங்களில், இந்திரன் மழைக் கடவுளாகப் போற்றப்படுகிறான். பிற்காலத்தில் ஆரியர்களின் போர்க் கடவுளாக புகழ்பெற்ற இவன், இடி மின்னலுடன் கூடிய மழையின் தெய்வ வடிவம் ஆவான். வேதத்தில் இந்திரனை தவிர வருணனும் நீருக்கு அதிபதியாக விளங்குகின்றான். ஆனால், வருணன் தரையில் ஓடும் நதிநீரை குறிக்கின்றான். வானத்திலிருந்து பொழியும் மழை நீரை இந்திரன் குறிக்கின்றான்.
மழையும் உழவும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போல் இருப்பதனால், நன்செய் (மருத) நிலத்து உழவர்களின் தெய்வமாக தேவேந்திரன் கருதப்படுகின்றான் (clanogeny). மருத நிலத்தில் நெல் வேளாண்மையிலும், நீர் மேலாண்மையிலும் திறம்பட விளங்கும் மள்ளர் இன மக்கள் தங்களின் இனத்தின் தோற்றம் பற்றிய கதைகள் வாயிலாக தாம் தேவேந்திரனின் பிள்ளைகள் என்று சொல்கின்றனர்.
இவனுக்குப் பாடப்படும் துதிப் பாடல்கள் மழை வேண்டும் பாடல்களாகவே உள்ளன. இதனை “தேவேந்திரகும்மி’’ என்று அழைக்கின்றனர். முருகன் தெய்வயானை திருமணத்தில் இந்திரனின் மகளைக் கொடுத்த சம்பந்தியாகக் கலந்து கொள்கின்றனர். திருப்பரங்குன்றத்தில் மணமக்கள் இவர்களின் மண்டபத்துக்கே மறு வீட்டுக்கு வந்து செல்கின்றனர்.
வளமைக்கும் மழைக்கும் கடவுள் இந்திரனே
இந்திரன், வளமைக் கடவுள் (Fertility God) ஆவான். மகத்தான இந்திரன், மேகத்திலே சயனித்திருந்த வஞ்சகனான விருத்திரனை அடித்தான் என்று விருத்ராசுரனை வதம் செய்த இந்திரனின் பெருமை பேசப்படுகின்றது. வேளாண் குடியினர் அறுவடை திருவிழாவின்போது, மேகத்தின் கடவுளான இந்திரனை வழிபட்டனர். மழை இல்லையேல் பயிர் இல்லை என்பதால் மழை தரும் இந்திரனை இவர்கள் கடவுளாகப் போற்றினர். நாடு முழுக்க ‘இவனே ஊருக்கு வரமளிக்கும் தலைவன் என்றும் கால்நடைகளை பாதுகாப்பவன்’ என்றும் ரிக் வேதம் இந்திரனை வாழ்த்துகின்றது.
தொல்காப்பியத்தில், மருத நிலத்தின் தெய்வமாக வேந்தன் குறிப்பிடப்பட்டாலும், பின்னர் வந்த உரை ஆசிரியர்கள் வேந்தனை இந்திரன் என்று விளக்கம் கூறினர். இந்திரன் மழைக்கும் போருக்கும் அதிபதியானதன் காரணம் என்னவென்றால், அவனை வணங்கிய மருத நிலத்து மக்கள் ஏர், போர் இரண்டிலும் சிறப்பு பெற்று விளங்கியதுதான். எனவே, இவர்களின் தலைவனான இந்திரனும் மழைக்கும் போருக்கும் உரிய இறைவனாகவே வேதங்களில் போற்றப்பட்டான்.
அக்னியை வென்ற மழை
ஆதி மனித வரலாற்றில், வேட்டைச் சமூகம் அக்னியை தெய்வமாகப் போற்றியது. அடுத்துத் தோன்றிய வேளாண் சமூகம், இந்திரனைத் தெய்வமாக போற்றியது. இக்காலகட்டத்தில் இந்திரனுக்கும் அக்னிக்கும் இடையே நடக்கும் போர் பற்றிய கதைகள் தோன்றின. சமயங்களின் வரலாற்றில்,
`‘புதியன புகுதலும் பழையன கழிதலும்
வழுவல கால வகையி னானே’’
– என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அக்னி வழிபாடு அல்லது அக்னி மதம் மறைந்து இந்திரன் வழிபாடு அல்லது இந்திரன் மதம் வந்தது. இந்திரன் மழை பெய்து அக்கினியை அணைத்தான். இந்த கதை மழை பெரியதா நெருப்பு பெரியதா என்ற போட்டி இருந்த காலத்தைக் சுட்டுகின்றது. அர்ஜுனன் சர கூடம் அமைத்து இந்திரனிடம் இருந்து அக்னியைக் காத்தான். அக்னியை அணைக்கும் திறமையுள்ள இந்திரனை வணங்கியவர்கள் அக்னியை வணங்கிய வேட்டுவ சமூகத்தைக் காட்டிலும் செல்வமும் செல்வாக்கும் பெற்று விளங்கினர்.
இதற்கு அடுத்த காலத்தில் வைணவ சமயம், இந்திர சமயத்தை உள்வாங்கிக்கொண்டது. திருமால் இந்திரனின் நண்பனாகவும் சகோதரனாகவும் போற்றப்பட்டார். வைதீக சமயங்கள் செல்வாக்குப் பெற தொடங்கியதும் அதுவரை போற்றப்பட்டு வந்த இந்திரன், பெண் பித்தநாகக் காட்டப்பட்டான். இவனை சாபம் பெற்றவனாக சிவன் அல்லது விஷ்ணு மூலம் சாப விமோசனம் பெற்றவனாகவும் தலபுராணக் கதைகளிலும் மற்ற புராணக் கதைகளிலும் கூறப்பட்டன. இந்திரனின் செல்வாக்கு மறைந்தது என்று இந்திர வழிபாடு நடைபெற்ற இடங்கள் இந்திரனுக்கு சாப விமோசனம் கொடுத்த இடங்களாக மாறின.
மழைக்கடவுளாகப் போற்றப்பட்டார். முல்லைப்பாட்டின் முதல் பகுதி மழையை ‘மா (திருமகள்) தாங்கு தடக்கையில்’ இருந்து கொட்டுவதாகவே காட்டுகின்றது. பெருமாளை காளமேகம், நீலமேகம், மேகவர்ணன் என்று மழையின் உருவமாகவே சித்தரித்தனர். மேகத்தின் நிறமாக அவனுடைய கருப்பு நிறம் அமைந்தது.
மழை வழிபாடு தொன்றுதொட்டு நடந்து வந்தாலும், காலத்திற்கு ஏற்ப சிற்சில மாற்றங்களைப் பெற்று வந்துள்ளது. மழைக் கடவுளான இந்திர வழிபாடு திருமால் வழிபாட்டிற்குள் சங்கமமாகி விட்டது. இவ்வாறாக வேறு பல நாடுகளிலும் மழை வேண்டிச் செய்த சில சடங்குகள் மதங்களுக்குள் சென்றுவிட்டன. நீர் தொடர்பான ஒரு சில சடங்குகள் மட்டும் தூய்மையாக்குதல் / சுத்திகரித்தல் (purification) என்ற பொருளில் இன்றும் தொடர்கின்றன. திருமுழுக்கு அல்லது ஞானஸ்நானம் என்ற பெயரில் கிறிஸ்தவ சமயத்தில் நீர் வழிபாடு தொடர்கின்றது.
திருக்குறளும்
`‘புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப்படும்”
– என்று புறச் சுத்திகரிப்பைச் சுட்டுகிறது.
ஒரு பொருளை தூயதாக்குவது நெருப்பும் நீரும் மட்டுமே. இக்கருத்தை நமது சமயச் சடங்குகளின் வாயிலாக நாம் மெய்ப்பித்து வருகிறோம். உலகம் எங்கும் மழைச் சடங்குகள் மழையை வருவிக்கவும் வந்த மழையை நிறுத்தவும் போன்மை சடங்கு முறையில் நடந்ததை பல எடுத்துக்காட்டுகள் வழியாக அறியலாம்.
மழை பெய்விக்கும் சடங்கு
வறட்சி ஏற்பட்ட காலங்களில் மழை பெய்ய வேண்டும் என்ற நினைத்த ஆதிகாலத்து மக்கள் மழை பெய்வதைப் போலவே பாவனைச் சடங்குகளைச் செய்தனர். மழை வருவிக்கும் சடங்குகள் உலக நாடுகள் எங்கும் காணப்பட்டன. இவற்றை பாவனைச் சடங்கு என்று குறிப்பிட்ட ஃபிரேசர் பல நாடுகளுக்குப் பயணப்பட்டு தகவல்களைத் திரட்டி தந்துள்ளார்.ரஷ்யாவில் வறட்சிக் காலத்தில் சாமி காடுகளில் (sacred groves) உள்ள ஃபர் மரங்களின் (fir trees) உச்சியில் மூன்று பேர் ஏறுவார்கள். அவர்களில் ஒருவன் இடிமுழக்கத்தை பிரதிபலிக்கும் வகையில் பெரும் சத்தத்தை ஏற்படுத்துவான். அடுத்தவன் குச்சிகளை உரசி உரசி நெருப்பு பற்ற வைத்து மின்னலைக் காட்டுவான்.
மூன்றாமவன் பானையில் இருக்கும் தண்ணீரை குச்சிகளில் தொட்டு தொட்டு தெளிப்பான். இவன்தான் மழையை வருவிப்பவன் (rain maker). இவன் தெறிக்கும் தண்ணீர் மழைக்கு நிகரானதாகும். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை வைத்துக் கொண்டு நாலா பக்கமும் இவன் தெளிக்கும் தண்ணீர் வானில் இருந்து மழை விழுவது போல் தோற்றமளிக்கும்.
குளோஸ்கா என்ற கிராமத்தில் மழை வருவிக்கும் சடங்காக இரவு நேரத்தில் பெண்கள் ஆடை இன்றி நடந்து வருகின்றனர். அப்போது அவர்கள் தரையில் தண்ணீரை தெளித்துக் கொண்டே வருவார்கள். இதனால் மழை பெய்யும் என்று இவர்கள் நம்புகின்றனர். இதற்கு மேற்கே உள்ள பெரிய தீவு ஒன்றில் ஒரு மந்திரவாதி மரத்தின் மேலிருந்து மரக்கிளை ஒன்றால் தண்ணீரைத் தொட்டு தெளிப்பார். இதுவும் மழை பெய்விக்கும் போன்மைச் சடங்காகும்.
தமிழகத்தில் கள்ளழகர் வைகையில் இறங்கும் நாளன்று பக்தர்கள் ஆட்டுத் தோலினால் செய்யப்பட்ட துருத்தியில் தண்ணீர் நிரப்பி சாமி மீதும் தரையிலும் முறைக்காரப் பெண்கள் மீதும் மாமன் மச்சான் மீதும் தண்ணீர் பீய்ச்சுவர். மலையில் இருந்து இறங்கி வரும் காளமேகம் (பெருமாள்) வைகை ஆற்றில் வந்து இறங்கும் நிகழ்ச்சி மலையில் பெய்த மழை ஆற்றில் கலக்கும் நிகழ்வைக் குறிக்கும் ஒரு பாவனைச் சடங்காகும். இந்நிகழ்வில் ஆண்கள் தண்ணீர் பீய்ச்சுவதும் மழை பெய்வதையே குறிக்கின்றது. காலப்போக்கில் காரணங்கள் மாறிவிட்டாலும் காரியங்கள் மாறுவதில்லை.
இந்தோனேசியாவில் புத்தர் சிலைகளை தெரு முனைகளில் மக்கள் கூடும் பொது இடங்களில் வைத்து அங்கு மழை நீர் தெளிப்பது போல் தண்ணீர் தெளிப்பார்கள். அங்கு வரும் மக்களுக்கு உணவு வழங்குவர். இதை போலவே சித்ரா பௌர்ணமி அன்று மதுரையில் அழகர் இறங்கும் திருக்கண்களில் (மண்டபங்களில்) பக்தர்களுக்கு சித்ரான்னம் எனப்படும் கட்டுச்சோறு (variety rice) வகைகள் வழங்கப் படும். இவற்றின் ஒற்றுமைக்கு முக்கியக் காரணம் இம்மழைச் சடங்கு ஆதி குடிகளிடம் இருந்து பௌத்த சமயத்துக்கு வந்து பின்பு வைணவ சமயத்திற்கு வந்துள்ளது. இந்தோனேசியாவில் பௌத்தர்கள் இன்றும் தண்ணீர் தெளிக்கும் சடங்கை பௌத்த சமயச் சடங்காக செய்து வருகின்றனர்.
பிரிட்டன் நாட்டில் சிவப்பு மற்றும் பச்சை நிறங்களில் உள்ள இலைகளை கொண்ட இளங்கொடியை எடுத்து வாழை இலையைச் சுற்றிக் கட்டி வைப்பார்கள். பின்பு அதனை தண்ணீரில் நனைத்து பூமிக்குள் புதைத்து விடுவார்கள். அதன் பின் அங்குள்ள பூசாரி புதைத்த இடத்தின் மீது வாய் கொப்பளிப்பார். அவர் வாய் கொப்பளிப்பது மழையைக் காட்டுவதாகும்.
வட அமெரிக்காவில், வறட்சியின் காரணமாக பயிர்கள் வாடும் போது ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி வைத்து சுற்றிலும் மக்கள் நான்கு முறை நடனமாடி வருவார்கள். ஒருவன் அதில் இருக்கும் தண்ணீரைக் குடித்து வானத்தை நோக்கித் துப்புவான். அவன் அவ்வாறு துப்புகின்ற தண்ணீர் மழை நீர் போன்றதாகும். பின்பு அந்த பாத்திரத்தை கவிழ்த்துப் போட்டு சுற்றிலும் தண்ணீர் வழிந்து ஓடும்படி செய்வார்கள்.
இந்த தண்ணீர் மண்ணோடு சேர்ந்து சேறு ஆகிவிடும். அந்த சேற்றில் நாட்டியக்காரர்கள் நால்வரும் விழுந்து புரண்டு தங்கள் முகத்தை மண்ணாக்கிக் கொள்வர். பின்பு நால்வருமே வானத்தை நோக்கி தண்ணீரைத் துப்புவார்கள். இதனால் வானம் மழை பொழிவதாக நம்பினர். இதனால் பயிர்களும் பாதுகாக்கப்படும் என்று கருதினர். வாயில் தண்ணீரை நிரப்பி துப்புவதும் கொப்பளிப்பதும் மழை வரவேண்டும் என்ற என்பதற்காக செய்யப்படும் போன்மைச் சடங்குகள் (Imitative Rituals) ஆகும். மழை வர வேண்டும் என்றால், மழை பெய்வதைப் போலவே ஆதி காலமக்கள் செய்து காட்டினர்.
மழை நிறுத்தும் சடங்கு
மழை நிற்க வேண்டும் என்றால் அது அவமானப்பட்டு திரும்பிச் செல்லும்படி பெண்களை நிர்வாணமாக இரவில் நடந்து வரச் செய்தனர். பெண்ணின் நிர்வாணத்தை கண்ட மழை, வெட்கப்பட்டு கொண்டு பூமிக்கு வராமல் மேலே இருந்துவிடுமாம். இப்படியான ஒரு நம்பிக்கை பல ஊர்களில் பல நாடுகளில் காணப்படுகின்றது.
அரபு நாட்டில் அல்கமார்க் எனப்படும் நாடோடி இனக்குழு மக்கள், மழையை நிறுத்துவதற்கு வினோதமான ஒரு சடங்கைச் செய்கின்றனர். பாலைவனத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட மரத்தின் கிளையை வெட்டி நெருப்பு வைத்து கொளுத்துகின்றனர். நெருப்பில் எரியும் அந்த கிளையின் மீது சடாரென்று தண்ணீரை தெளிப்பர். வேகமாக தண்ணீர் தெளித்ததும் நெருப்பு அணைந்து
விடும். இதைப் போல பெய்யும் மழையும் நின்றுவிடும் என்று இவர்களின் நம்பிக்கை.
பிரிட்டன் நாட்டில் ஒரு சிறு கல்லை நன்றாக எரிய விட்டு பின்பு அதன் மீது தண்ணீர் தெளிப்பது வழக்கம். கல் எரிந்து நொறுங்கிவிடும். சூடான சாம்பலை காற்றில் தூவுவார்கள். இதனால் மழை இவர்களின் சுடு சாம்பலில் ஆவி ஆகி நின்றுவிடும் என்று நம்புகின்றனர்.ஆந்திராவில் பேசும் மக்களிடையே மழையை நிறுத்த ஒரு பழக்கம் பின்பற்றப்படுகின்றது. கன்னிப் பெண் ஒருத்தி தன் கையில் ஒரு தீப்பந்தத்தை ஏந்திக் கொண்டு இரவில் உடை இன்றி ஊரைச் சுற்றி வந்தால் கனமழை நின்று போகும். இப்படி ஒரு நம்பிக்கை நெடுங்காலமாக இருந்து வருகிறது.
நியூ சவுத் வேல்ஸில் உள்ள பழங்குடி மக்கள், மழை நிற்க வேண்டுமென்றால் தீர்ப்பந்தங்களைக் காற்றில் எறிவார்கள். அதே நேரத்தில் அவர்கள் ஊளை இட்டு கத்துவார்கள். வானத்தில் நோக்கி எறியப்படும் தீப்பந்தங்கள் வானத்திலிருந்து பெய்யும் மழை நீரை அணைத்து விடும் என்பது இவர்களின் நம்பிக்கையாகும்.
வடக்கு ஆஸ்திரேலியாவில் வாழும் அனுலா எனப்படும் பழங்குடி மக்கள், ஒரு பச்சை கிளையை நெருப்பில் லேசாக வாட்டி பின்பு காற்றை நோக்கி அதை அடிப்பதைப் போல பாவனை காட்டுவார்கள். இந்த பாவனைச் சடங்கினால் பெய்து கொண்டிருக்கும் மழை நெருப்புக்குச்சியால் அடிபட்டு அணைந்துவிடும் என்று இவர்கள் நம்புகின்றனர்.
மத்திய ஆஸ்திரேலியாவின் மண்ணின் மைந்தர்கள் மழை நிற்க வேண்டும் என்றால், மழையை நோக்கி அது செத்துவிட்டதாக சொல்லி சத்தமாக ஒப்பாரி வைத்தனர். இதனால் மழை நின்று விடும் என்று நம்பினர். பல உலக நாடுகளிலும் மழை நிற்பதற்கும் மழை பெய்வதற்கும் என்று தனித் தனியாக பாவனைச் சடங்குகள் செய்து வந்தனர்.
