×

கோத்தகிரி உயிலட்டி அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்

கோத்தகிரி : கோத்தகிரி பகுதியில் பெய்த தொடர் மழையின் காரணமாக உயிலட்டி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருவது காண்போர் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.கோத்தகிரி அருகே வனப்பகுதியை ஒட்டியுள்ள உயிலட்டி நீர்வீழ்ச்சி பாதுகாப்பு அம்சங்கள் இன்றி ஆபத்தான வகையில் உள்ளது.

இதனால், அருவி பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சுற்றுலா பயணிகள் கூகுள் மேப் மூலம் கண்டு பிடித்து இந்த நீர்வீழ்ச்சிக்கு படையெடுத்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே போல் இளைஞர்கள் இந்த நீர்வீழ்ச்சிக்கு குளிக்க சென்ற போது, பாறை இடுக்குளில் சிக்கிய இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதே போல இந்த நீர்வீழ்ச்சியில் தொடர்ந்து உயிர் பலிகள் ஏற்பட்டு வருகிறது. உயிலட்டி நீர்வீழ்ச்சிக்கு யாரும் செல்லக்கூடாது என வனத்துறை சார்பில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வார விடுமுறை நாட்கள் மற்றும் தொடர் விடுமுறைகளில் ஏராளமான சுற்றுலா பயணிகள் உயிலட்டி நீர் வீழ்ச்சி பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து ஆபத்தை உணராமல் அங்கு குளித்து வருகின்றனர்.

எனவே மாவட்ட நிர்வாகம் இப்பகுதியை பாதுகாப்பான சுற்றுலா தலமாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை நீர்வீழ்ச்சிக்கு செல்லாமல் தடுக்க பாதுகாப்பு கம்பி வேலிகளை அமைக்க வேண்டும்.

விடுமுறை நாட்களில் இந்த் பகுதியில் பாதுகாப்பு பணியில் வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு உயிலட்டி நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் செல்லாதவாறு தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Uyilatti Falls ,Kotagiri ,
× RELATED கடலூர் மாவட்டத்தில் 6,636 தூய்மை பணியாளர்கள் பணிபுரிகின்றனர்