×

இரண்டு கட்சி தலைமைப்பதவியில் உள்ளவர்களின் கூட்டணி பேச்சு கெஞ்சுவது என்றால் காலில் விழுந்ததற்கு என்ன சொல்வது? எடப்பாடிக்கு ப.சிதம்பரம் பதிலடி

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் ஒன்றிய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: ராகுல் காந்தியை, கனிமொழி எம்பி சந்தித்தது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். நேரடியாக இரண்டு கட்சி தலைவர்கள் அல்லது கட்சி தலைமையில் உள்ளவர்கள் சந்தித்து கூட்டணி தொடர்பாக பேசுவது கெஞ்சுவது என்றால், எடப்பாடி காலில் விழுவதற்கு என்ன சொல்வது? இது எல்லாம் தேவையில்லாத விஷயங்கள். உருப்படியான காரியங்களை பேச வேண்டும். உருப்படியான காரியங்களை செய்ய வேண்டும்.

விஜய் தந்தை அவரது ஆசையை கூறுகிறார். அதில் தப்பு கிடையாது. சின்ன, சின்ன கட்சிகளுக்கு சின்ன சின்ன ஆசைகள் இருக்கலாம். பெரிய கட்சிகளுக்கு நாட்டு மக்களை பற்றித்தான் கவலை இருக்கும். அனைத்து மாநிலங்களிலும் பாஜவினர் மிரட்டி கட்சியை உடைப்பது, உடைந்த கட்சியில் ஒருபிரிவினரை சேர்ப்பது தான் அவர்களது வழக்கம். தங்கம் வாங்குவது அதிகரித்துள்ளதால் விலை உயர்ந்துள்ளது. தங்கம் வாங்குவதை சேமிப்பாக மக்கள் கருதுகின்றனர். வங்கியில் போட்டால் பணவீக்கத்தின் காரணமாக மதிப்பு குறையும். ரூபாய் மதிப்பு குறைந்தால் தங்கம் விலை அதிகரிக்கும். தங்கம் விலை அதிகரித்தால் ரூபாய் மதிப்பு குறையும்.

அந்த சூழ்நிலையில் இந்திய பொருளாதாரம் உள்ளது. அதற்கு பிரதமர், நிதி அமைச்சர் தீர்வு காண வேண்டும். பெண்களை லட்சாதிபதியாக ஆக்கியுள்ளோம் என விளம்பரம் போடுகின்றனர். எந்த ஊரில், எந்த கிராமத்தில் லட்சாதிபதி பெண் உள்ளனர். வாக்காளர் பட்டியலில் பல பேரை நீக்கினர், பின்னர் நடந்த முகாமில் பலரை கட்சியினர் சேர்த்துள்ளனர். தற்போது நீக்கல் பட்டியல் எது என தெரியவில்லை, அந்த நீக்கல் பட்டியலை தரவில்லை. பெரிய மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை அச்சிடுகிறார்கள். ரூ.5, ரூ.10, ரூ.50ஐ குறைத்து அச்சடிக்கின்றனர். அவர்களின் கணக்கு தவறு. பற்றாக்குறை உள்ள ரூபாய் நோட்டுகளை அதிகமாக அச்சிட வேண்டும். இது அச்சிடாமல் போனது நிதி அமைச்சகம், ரிசர்வ் வங்கியின் தவறு. இவ்வாறு கூறினார்.

* நான் உங்கள மட்டும்தான் நம்பி இருக்கேன்…
டிடிவி: அதிமுகவால் 3 முறை முதல்வரான ஓபிஎஸ் தன்னை வாழவைத்த கட்சிக்கு நன்றிக்கடன் செலுத்த வேண்டிய நேரம் வந்து விட்டது. ஓரணியில் இணைய வேண்டும் என அழைப்பு விடுக்கிறேன். அவரும் நல்ல முடிவை எடுப்பார் என நம்புகிறேன்.
ஓபிஎஸ்: பிரிந்து கிடக்கும் அதிமுகவினர் ஒன்றியணைய வேண்டும் என்பதே எனது கோரிக்கை. அதிமுகவில் என்னை இணைத்து செயல்படுவதற்கான முயற்சியில் டிடிவி.தினகரன் ஈடுபட வேண்டும்.
நெட்டிசன்கள்: ரெண்டு பேரும் ஒரு பிளான் போட்டு அவங்களுக்கு ஆப்பு வைக்கலாம்னு வெளியே போனாங்க. ஆனா, மேலே இருக்கவன் ஒரு பிளான் போட்டான். அவன மீறி போன ரெண்டுபேருக்கும்தான் ஆபத்து. அதான் அங்க போய் டிடிவி சேர்ந்துட்டாரு. இப்போ நான் உன்ன கூப்பிடுற மாறி கூப்பிடுறேன். நீயும் ஓகே சொல்ற மாறி ஓகே சொல்லிட்டு வந்து சேர்ந்திடு…

Tags : P. Chidambaram ,Karaikudi ,Former Finance Minister ,Sivaganga District ,Karaikudi Chidambaram ,Edappadi Palanisami ,Rahul Gandhi ,Kanimozhi ,
× RELATED சிபிஐ மூலம் நெருக்கடி கொடுத்து...