×

திமுகவின் கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் சென்னையில் ரூ.500 கோடியில் பாலங்கள் கட்டப்பட்டுள்ளது: இன்னும் ரூ.516 கோடியில் 19 பாலங்கள் கட்டும் பணிகள் நடக்கிறது; முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: சென்னை, பெரம்பூர் நெடுஞ்சாலை திரு.வி.க. நகர் சட்டமன்ற தொகுதி சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில், வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள அண்ணல் அம்பேத்கர் திருமண மாளிகையை திறந்து வைத்து, 10 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: சென்னையில் ரூ.500 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பாலங்களை அமைத்திருக்கிறோம். அதுமட்டுமல்லாமல், ரூ.516 கோடி மதிப்பீட்டில் இன்னும் 19 பாலங்கள் இந்த சென்னை மாநகருக்கு உருவாக்கி தருவதற்கு அந்த பணிகள் எல்லாம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. திரு.வி.க. நகர் தொகுதியில், திறந்து வைக்கப்பட்டிருக்கக்கூடிய ‘அண்ணல் அம்பேத்கர் திருமண மாளிகை’, இதனால், இந்த பகுதியில் இருக்கக்கூடிய மக்கள் மட்டுமல்ல; சுற்றுவட்டாரத்தில் இருக்கக்கூடிய தொகுதிகளுக்கும், பகுதிகளுக்கும் நிச்சயமாக இந்த மண்டபம் பயனளிக்கும்.

இந்த திருமண மண்டபத்தில், 10 ஜோடிக்கு திருமணம் நடைபெற இருக்கிறது. திருமணத்தை காணக்கூடிய மணமக்களுக்கு, நான் எந்த அறிவுரையும் சொல்ல தேவையில்லை. இப்போது ஒரே ஒரு அறிவுரை மட்டும் சொல்கிறேன். உங்களுக்கு பிறக்கக்கூடிய குழந்தைகளுக்கு அழகான தமிழ்ப் பெயர்களை சூட்டுங்கள்; யாரையும் விமர்சனம் செய்து பேசவில்லை; யாரையும் கொச்சைப்படுத்தி பேசுகிறேன் என்று நினைக்க வேண்டாம். ஆங்கிலத்தில், வடமொழியில் பெயர் வைப்பதெல்லாம் பார்க்கிறோம்; இதை சொல்லும்போது, என்னுடைய பெயரும் ஸ்டாலின் – அது தமிழ் பெயர் இல்லை. இருந்தாலும் என்னுடைய பெயர் வைத்ததற்கு காரணம் உண்டு – அது உங்களுக்கு எல்லாம் தெரியும். ரஷ்யாவில் புரட்சியாளர் ஸ்டாலின் நினைவில் கொண்டு கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தின் மீது கலைஞர் கொண்டிருந்த நம்பிக்கையின் அடிப்படையில், அவர் இறந்த நேரத்தில், நான் பிறந்த காரணத்தால் அந்த பெயரை எனக்கு சூட்டி, கலைஞர் மகிழ்ந்தாரே தவிர, வேறு எதுவும் கிடையாது. இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Dimukha ,Chennai ,Chief Minister ,Mu. K. Stalin ,Perampur Highway ,Shri ,Nagar Assembly Constituency Chennai Metropolitan Development Group ,Annal Ambedkar Wedding House ,
× RELATED இரண்டு கட்சி தலைமைப்பதவியில்...