×

ஒவ்வொரு கூட்டத்தொடர் கூடும் முன்பும் நாடாளுமன்றம் முன்பு நின்று பாசாங்கை வெளிப்படுத்துவார் : பிரதமர் மோடி மீது காங்கிரஸ் தாக்கு!!

டெல்லி : ஒவ்வொரு கூட்டத்தொடர் கூடும் முன்பும் நாடாளுமன்றம் முன்பு நின்று வழக்கமான பாசாங்கை வெளிப்படுத்துவார் என்று பிரதமர் மோடி மீது காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கடுமையாக சாடியுள்ளார். குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கிய நிலையில், இன்று நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில், “இந்தியாவின் வளர்ச்சியை மனதில் வைத்து எம்பிக்கள் செயல்பட வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கு எம்பிக்கள் பாடுபட வேண்டும். மக்களின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான தளமாக நாடாளுமன்றம் விளங்க வேண்டும்.”இவ்வாறு தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “தேசிய பிரச்சனைகளில் எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையை பெற அனைத்து கட்சி கூட்டத்துக்கு பிரதமர் மோடி தலைமை வகிக்க மாட்டார். நாடாளுமன்றத்தில் திடீரென கடைசி நிமிடத்தில் மசோதாக்களை அறிமுகம் செய்வார்கள். ஆய்வுகள் இன்றி மசோதாக்கள் நேரடியாக நாடாளுமன்றத்தில் வலுக்கட்டாயமாக நிறைவேற்றப்படும். நாடாளுமன்றத்திற்குள் பிரதமர் மோடி அமர்ந்து எதிர்க்கட்சித் தலைவர்களின் பேச்சுக்கு பதிலளிக்க மாட்டார். நாடாளுமன்றத்தில் பதில் சொல்லாமல், இரு அவைகளிலும் தேர்தல் பரப்புரை கூட்டத்தைப் போல பேசுவார். ஒவ்வொரு கூட்டத்தொடர் கூடும் முன்பும் நாடாளுமன்றம் முன்பு நின்று வழக்கமான பாசாங்கை பிரதமர் மோடி வெளிப்படுத்துவார். இன்றைய நிகழ்ச்சி இந்தத் தொடரின் ஒரு பகுதியாகும்.” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Congress ,Modi ,Delhi ,Jairam Ramesh ,Republic President ,Drawpati Murmu ,
× RELATED அதிமுகவில் இணைக்க டிடிவி தினகரன்...