பருவமழையால் பயிர்கள் சேதம் கணக்கெடுப்பில் பெரும் குளறுபடி குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார்

திண்டுக்கல், ஜன. 30: திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்றது. விவசாயிகள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் தங்களுடைய கோரிக்கைகளை விவசாயிகள் தெரிவித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராசு, வேளாண்மை இணை இயக்குனர் பாண்டித்துரை, துணை இயக்குனர் சுருளியப்பன் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது: வடகிழக்கு பருவமழை மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்ததால் நெற்பயிர்கள் மழையில் சாய்ந்து சேதமடைந்தன. பல பகுதிகளில் நெற்பயிர்கள் முளைத்து விட்டன. இந்த சேதமான நெற்பயிர்களை கணக்கெடுக்கும் பணியில் நிலக்கோட்டை, வத்தலக்குண்டு உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.  வெளியூர் சென்ற விவசாயிகளின் நிலங்களை பார்வையிடாமலும் கணக்கெடுக்கும் பணியில் பல குளறுபடிகள் நடந்துள்ளது.

வெளியூர் சென்ற விவசாயிகளின் நிலங்களை பார்வையிடாமல் கணக்கெடுப்பு நடத்தியுள்ளனர். எனவே விடுபட்ட விவசாய நிலங்களை முறையாக பார்வையிட்டு கணக்கெடுப்பு நடத்த வேண்டும். சிறுமலை வனப்பகுதியில் காட்டெருமை  தொல்லை அதிகமாக உள்ளது. சாணார்பட்டி மலை அடிவாரத்தில் உள்ள விவசாய நிலங்களில் வனவிலங்குகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. எனவே, சேதமான பயிர்களை கணக்கிட்டு இழப்பீடு வழங்க வேண்டும்.

நிலக்கோட்டையில் மல்லிகை செடி சாகுபடி செய்வதற்கு மானிய விலையில் மல்லிகைச் செடிகளை வழங்க வேண்டும். தொப்பகுளத்துப்பட்டி தண்ணீர் வரத்து கால்வாயை தூர்வார வேண்டும். நத்தம் சாக்குடி பெரியகுளத்தில் சீமைக்கருவேல செடிகள் அதிகளவில் உள்ளதால் நல்லமழை பெய்தும் தேவையான அளவு தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, குளத்தை தூர்வாரி சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும். நத்தம் காட்டு பெரியகுளத்திற்கு தூர்வாரி தண்ணீர் வர ஏற்பாடு செய்ய வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர்.

இதற்கு வேளாண்மை துணை இயக்குனர் சுருளியப்பன் பதிலளித்துப் பேசுகையில் ``வடகிழக்கு பருவமழையால் சேதமான பயிர்கள் குறித்து கடந்த 15 நாட்களாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அது தொடர்பாக மதிப்பீடு செய்யப்பட்டு அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. கணக்கெடுப்பு குறித்து ஏற்கனவே வேளாண்மை துறை மூலம் முறையான அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.  எனவே வெளியூர் சென்ற விவசாயிகள் விடுபட்டிருந்தால் சம்பந்தப்பட்ட வேளாண்மை அலுவலர் அல்லது உதவி இயக்குனரை தொடர்பு கொள்ளலாம்.  விலங்குகளால் பாதிக்கப்பட்ட பயிர்களை வனத்துறை அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்து பின்னர் மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசிடம் நிதி உதவி பெற்று இழப்பீடு தொகை வழங்கப்படும்’’ என்று கூறினார்.

Related Stories: