- மருத்துவர்கள் சங்கம்
- திருவள்ளூர்
- நிலை
- தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம்
- பிரபு சங்கர்
- திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
திருவள்ளூர், ஜன.30: திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் மாநில பொருளாளர் பிரபுசங்கர், நிருபர்களிடம் கூறியதாவது: மருத்துவர்கள் ஊதிய உயர்வு, விருப்ப ஓய்வு பெறுவதில் அனைத்து பிரிவு மருத்துவர்களுக்கும் அனுமதி அளிக்கும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தகுதிக்கேற்ற பதவி உயர்வு உள்பட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். முதல் கட்டமாக தமிழகத்தில் உள்ள மருத்துவர்கள் அனைவரும் அரசு கூடுதல் செயலருக்கு கடிதம் அனுப்பும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். சீனியாரிட்டி முறையை தீர்மானிக்கும் நடைமுறையை மாற்றி அமைக்க வேண்டும் என்றும், விருப்ப ஓய்வு பெற 2 துறை மருத்துவர்களுக்கு மட்டும் உள்ள திட்டத்தை அனைத்து துறை மருத்துவர்களுக்கும் வழங்க வேண்டும்.
அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களுக்கு கடினமான பணிக்காக வழங்கப்படும் தொகையை 3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். மருத்துவர்களுக்கு பதவி உயர்வுடன் அதற்கான ஊதிய நிர்ணயமும் அதிகரிக்க வேண்டும். அரசு உடனடியாக கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இக்கோரிக்கைகளை ஏற்காத பட்சத்தில் வரும் பிப்.2 ம் தேதி தர்ணா போராட்டம் நடத்தப்படும். இதனைத்தொடர்ந்து, 6ம் தேதி புறநோயாளிகள் பிரிவில் 2 மணி நேரம் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இதற்கு சுமூக முடிவு ஏற்படாவிட்டால் 7ம் தேதி சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் கூட்டி போராட்டங்களை தீவிரப்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
