×

தை மாத சுப முகூர்த்த நாள் திருத்தணி முருகன் கோயிலில் 65 ஜோடிகளுக்கு திருமணம்

திருத்தணி, ஜன.29: தை மாதம் சுபமுகூர்த்த நாளை முன்னிட்டு, திருத்தணி முருகன் கோயிலில் நேற்று காலை 65 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. இதனால், மலைக்கோயில் திருவிழாக்கோலம் பூண்டு காணப்பட்டது.
திருத்தணியில் சிறப்பு பெற்ற முருகன் கோயில் சன்னதியில் திருமணங்கள் நடத்த ஏராளமானோர் ஆர்வம் காட்டுகின்றனர். இதற்காக முருகன் கோயிலிலில் முறையாக அனுமதி பெற்று திருமணம் நடத்தப்படுகிறது. தை மாதத்தில் சுப முகூர்த்த நாளான நேற்று மலை கோயிலில் 65 ஜோடிகளுக்கு திருமணங்கள் நடைபெற்றது. நேற்று அதிகாலை மணமக்கள் அவர்களின் உறவினர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் மலைக்கோயிலில் குவிந்தனர். அதிகாலை முதல் காலை 11 மணி வரை சுப முகூர்த்த நேரத்தில், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணங்கள் நடைபெற்றன.

அப்போது, காவடி மண்டபம், திருப்புகழ் மண்டபம் அருகில் தற்காலிக மண்டபங்களில் திருமண பந்தல்கள் அமைக்கப்பட்டு, ஹோம மந்திரங்கள் முழங்க திருமணங்கள் நடைபெற்றது. இதனால், திருத்தணி முருகன் கோயிலில் மங்கள இசைகளும், கெட்டி மேளம் சத்தத்துடன் கோலாகலமாக காணப்பட்டது. திருமணம் முடிந்த கையோடு புதுமண தம்பதிகள் மற்றும் அவரது உறவினர்கள் சாமி தரிசனம் செய்ய ஆர்வம் காட்டினர்‌. இதனால், பொது வரிசை மற்றும் ரூ.100 சிறப்பு வரிசையில் ஏராளமானோர் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். கடும் போக்குவரத்து நெரிசல் விழா நாட்கள் மற்றும் சுபமுகூர்த்த நாட்களில மலை கோயிலுக்கு ஆட்டோக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் எந்த ஒரு தடையின்றி ஆட்டோக்கள் மலை கோயிலுக்கு சென்று வந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஏராளமான இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் மலைக்கு வந்ததால் சாதாரண பக்தர்கள் நடந்து சென்று வர கடும் அவதி அடைந்தனர்.

Tags : Thirutani Murugan Temple ,Thai ,Thirutani ,Murugan Temple ,Thirutani… ,
× RELATED வடசென்னை அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு