×

திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதிகளில் சாலையே தெரியாத அளவிற்கு கடும் பனி மூட்டம்: முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்ற வாகனங்கள் வாகன ஓட்டிகள் அவதி

திருவள்ளூர், ஜன.29: திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக சாலையே தெரியாத அளவிற்கு கடும் பனி மூட்டமாக காணப்படுவதால், முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சென்றனர். பனிக்காரமாக வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சில நாட்களாக லேசான பனி மூட்டம் இருந்து வந்தது. இந்நிலையில், நேற்று கடும் பனி மூட்டம் நிலவியது. திருவள்ளூர் சுற்றுப்புற பகுதிகள் முழுவதும் பனி மூட்டமாக மாறி வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் சாலைகள் என அனைத்து இடங்களிலும் பனி மூடி குளிர் பிரதேசமாக காட்சியளித்தது.

இதனால் திருவள்ளூர், திருத்தணி, கனகம்மாசத்திரம் பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, ஊத்துக்கோட்டை, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, பூந்தமல்லி, வெள்ளவேடு, திருமழிசை, திருநின்றவூர், பட்டாபிராம், ஆவடி உள்படட மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடும் பனி மூட்டம் காரணமாக சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு சென்று வந்தனர். குறிப்பாக, ஆந்திர மாநில எல்லை பகுதியை ஒட்டியுள்ள ஊத்துக்கோட்டை, பூண்டி, கும்மிடிப்பூண்டி பகுதிகளில் மலைகள், காடுகள் நிரம்பிய பகுதிகள் என்பதால், இப்பகுதிகளில் கடும் பனி மூட்டம் நிலவி வருகிறது. நேற்று முன்தினம் இரவு முதலே கடுமையான பனி மூட்டம் சாலையே தெரியாத அளவுக்கு மறைத்து நின்றது.

சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள், முகப்பு விளக்குகளை எரிய விட்டுக் கொண்டும், ஒலியை எழுப்பிக் கொண்டும் சென்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். மேலும், சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் கூட தெரியாத அளவிற்கு பனி மூடப்பட்டு இருந்தன. கடுமையான பனியின் காரணமாக ரயில் நிலையங்களில் 8 மணி வரை பனி மூட்டத்தால், எந்த நடைமேடையில் ரயில் வருகிறது என தெரியாமல் மேம்பாலத்தின் மீது நின்று பார்த்துவிட்டு, அதன் பின் ரயிலில் பயணிகள் பயணித்தனர். அதே நேரத்தில், திருவள்ளூர் ரயில் நிலையத்தில் உள்ள பயணிகளுக்கு எந்த ரயில் எந்த நடைமேடையில் வருகிறது என தெரியாமல், ஒலிபெருக்கி மூலம் அறிவித்த பிறகே சென்று ரயில் ஏற வேண்டிய நிலையும் ஏற்பட்டது.

ரயில் நிலையத்திற்குள் வரும் புறநகர் மற்றும் விரைவு ரயில்கள் மெதுவாக இயக்கப்படுவதால் ரயில்கள் நேரத்தில் சற்று காலதாமதமும் ஏற்பட்டது.மேலும், காலை 8 மணி வரை பனி மூட்டம் காணப்படுவதால், காலையில் நடை பயிற்சி செய்பவர்கள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகினர். பனி மூட்டம் காரணமாக திருவள்ளூர் முழுவதும் பனி மூடி குளிர் பிரதேசமாக அழகாக காட்சியளித்தாலும், மற்றொருபுறம் பனி மூட்டத்தால் பொதுமக்கள் பயணிகள், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். கடந்த ஒரு வாரமாக அதிகாலை முதல் 8 மணி வரை பனி மூட்டம் அதிகளவில் இருப்பதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இந்நிலையில், பனி மூட்டம் மட்டுமில்லாமல் கடும் குளிரும் நிலவியது. இதனால் வாகனங்களில் சென்றவர்கள் வாகனங்களை சாலை ஓரம் நிறுத்திவிட்டு, தீ மூட்டி குளிர் காய்ந்த சூழ்நிலையும் நிலவியது.

Tags : Thiruvallur ,
× RELATED வடசென்னை அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு