ராமேஸ்வரம், ஜன.29: ராமேஸ்வரம் நகராட்சியில் பணியாற்றும் வெளிமாநில தூய்மைப் பணியாளர்கள் தங்குமிடத்தில் அடிப்படை வசதிகள் குறித்து முதன்மை மாவட்ட நீதிபதி ஏ.கே.மெஹ்பூப் அலிகான் ஆய்வு செய்தார். வெளிமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் குழந்தைகளின் கல்வியை உறுதி செய்தி வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் நகராட்சியில் தூய்மை பணிக்காக தனியார் ஒப்பந்த நிறுவன மூலம் வெளிமாநில தொழிலாளர்கள் 32 பேர் பணியில் உள்ளனர். இவர்கள் குடும்பத்துடன் ராமேஸ்வரம் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள சுற்றுலா வாகன பார்க்கிங் வளாகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்டுகளுக்கு முன்பு இவர்கள் சுகாதாரமற்ற நிலையில் எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி நோய் தொற்று பரவும் அபாயத்தில் உள்ள இடத்தில் தங்கி பணி செய்து வருவதாக செய்தி வைரலாக பரவியது.
இதையெடுத்து ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி ஏ.கே.மெஹ்பூப் அலிகான் கவனத்திற்கு சென்றதை அடுத்து நேற்று ராமேஸ்வரம் வருகை தந்து நேரில் ஆய்வு மேற்கொண்டார். நகராட்சி சுகாதாரத்துறை அலுவலர் சங்கரலிங்கம், ஒப்பந்ததாரர் நேதாஜி ஆகியோரிடம் வெளிமாநில தூய்மை பணியாளர்கள் பாதுகாப்பான அடிப்படை வசதிகள் கூடிய தங்குமிடத்திற்கு உரிய ஏற்பாடு செய்ய வேண்டும். அவர்களின் குழந்தைகளின் கல்வியை உறுதி செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார். தற்போது உள்ள 15 குழந்தைகளை அங்கன்வாடியில் சேர்க்க வேண்டும் என வெளி மாநில தொழிலாளர்ளிடம் கேட்டுக்கொண்டதுடன் அதற்கான ஏற்பாடுகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் ஒப்பந்ததாரர் 10 நாட்களுக்குள் செய்து கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார். மீண்டும் இதுகுறித்து ஆய்வு செய்யப்படும் என அலுவலர்களிடம் நீதிபதி தெரிவித்தார். இந்த ஆய்வின் போது சார்பு நீதிபதி பாஸ்கரன் மற்றும் நகராட்சி உதவி ஆய்வாளர் விக்னேஷ்வரன் உடனிருந்தனர்.
