×

தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு கடத்திய ரூ.10.70 கோடி மதிப்புள்ள உயர் ரக கஞ்சா பறிமுதல்

சென்னை, ஜன.29: தாய்லாந்து நாட்டில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.10.70 கோடி மதிப்புள்ள உயர் ரக கஞ்சாவை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து கேரள வாலிபர்கள் இருவரை கைது செய்தனர்.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து, தாய் ஏர்வேஸ் பயணிகள் விமானம் நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. விமானத்தில் இருந்து வந்த பயணிகளை சுங்கத்துறை ஏர் இன்டெலிஜென்ட் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த 26 மற்றும் 28 வயதுடைய 2 இளைஞர்கள், சுற்றுலா பயணிகளாக தாய்லாந்து சென்று விட்டு சென்னைக்கு திரும்பினர்.

அவர்கள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, இருவரையும் நிறுத்தி விசாரித்தபோது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். தொடர்ந்து, இருவரின் உடமைகளையும் சோதனை செய்தபோது உணவுப் பொருட்களுக்கு இடையே பார்சல் ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அந்த பார்சலை வெளியே எடுத்து பார்த்தபோது அதில் உயர் ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா இருப்பது தெரிந்தது. மொத்தம் 10 கிலோ 700 கிராம், ஹைட்ரோபோனிக் கஞ்சா இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூ.10.70 கோடி ஆகும்.

இதையடுத்து அதிகாரிகள் கஞ்சாவை பறிமுதல் செய்து, இருவரையும் போதை பொருட்கள் கடத்தல் வழக்கில், கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது இவர்கள் சர்வதேச போதைப்பொருள் கடத்தும் கும்பலை சேர்ந்த கடத்தல் குருவிகள் என தெரியவந்தது. இதுதொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை விமான நிலையத்தில், ஒரே நேரத்தில் ரூ.10.7 கோடி மதிப்புடைய உயர் ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Thailand ,Chennai ,Kerala ,Thai Airways… ,
× RELATED முதல்வர் வீட்டிற்கு வெடிகுண்டு...