×

தாத்தா இறந்த துக்கம் தாளாமல் 7வது மாடியிலிருந்து குதித்து கல்லூரி மாணவி தற்கொலை

திருப்போரூர்: கேளம்பாக்கம் அருகே ஒரு தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு தங்கி படிக்கும் கல்லூரி மாணவி, தாத்தா இறந்த துக்கம் தாங்காமல் 7வது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டாள். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் மாதவராவ். இவர், தெற்கு ரயில்வே பணிமனையில் மெக்கானிக்காக வேலைபார்த்து வருகிறார். இவரது மகள் அனுஸ்ரீ(20). இவர், கேளம்பாக்கம் அருகே கழிப்பட்டூரில் ஒரு தனியார் அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் வாடகைக்கு தங்கி, படூரில் ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் பிபிஏ 2ம் ஆண்டு படித்து வந்துள்ளார். இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன், ஆந்திராவில் அனுயின் தாய்வழி தாத்தா சேஷவரதலு என்பவர் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். அதற்கான இறுதி சடங்குகளை முடித்துவிட்டு நேற்றுதான் அனுஸ்ரீ குடும்பத்தினருடன் சென்னைக்கு வந்துள்ளார்.

பின்னர் நேற்று காலை பாரிமுனையில் இருந்து கேளம்பாக்கம் செல்லும் மாநகர பேருந்தில் அனுயை தந்தை ஏற்றி அனுப்பி, வீட்டுக்கு திரும்பியுள்ளார். இதைத் தொடர்ந்து, நேற்றிரவு 9 மணியளவில் தந்தைக்கு அனுஸ்ரீ போன் செய்து, ‘தாத்தா இல்லாத உலகத்தில் எனக்கு வாழ விருப்பம் இல்லை. அதனால் நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன்’ என்று கூறி செல்போனை சுவிட்ச்ஆப் செய்துள்ளார். இந்நிலையில், நேற்றிரவு 10 மணியளவில், தான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் 7வது மாடிக்கு கல்லூரி மாணவி அனுசென்று, அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்ததும் கேளம்பாக்கம் போலீசார் விரைந்து வந்தனர். அங்கு கல்லூரி மாணவி அனுயின் சடலத்தை கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி அவரது பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தனர். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தாத்தாவின் மரணத்தால் ஏற்பட்ட மனஉளைச்சலில் கல்லூரி மாணவி தற்கொலை செய்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

Tags : Kelambakkam ,Chennai Vyasarpadi… ,
× RELATED தமிழ்நாட்டில் பிப்.3 வரை வறண்ட வானிலை நிலவும்: வானிலை ஆய்வு மையம் தகவல்