- 4000வது கும்பாபிஷேக விழா
- சேமத்தம்மன் கோயில்
- பெரம்பூர்
- அமைச்சர்
- பி.கே.சேகர்பாபு
- 4000வது குடமுழுக்கு நன்னீராட்டு விழா
- அருள்மிகு செமாத்தம்மன் கோயில்
- பெரம்பூர், சென்னை
- இந்து சமய அறநிலையத்துறை
- கும்பாபிஷேக விழா
பெரம்பூர்: சென்னை பெரம்பூரில் நூற்றாண்டு பழமையுடன் பிரசித்தி பெற்ற அருள்மிகு சேமாத்தம்மன் திருக்கோயிலில் இன்று காலை இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் 4000வது குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா மிக விமரிசையாக நடைபெற்றது. இக்கோயிலில் கடந்த 2016ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடைபெற்ற நிலையில், இன்று காலை இந்து சமய அறநிலையத்துறையின் 4000வது கோயில் குடமுழுக்கு பெருவிழாவாக நடந்தது. இக்கோயில் உள்பட தமிழ்நாட்டில் உள்ள 75 திருக்கோயில்களில் இன்று இந்து சமய அறநிலையத்துறை சார்பில் குடமுழுக்கு நன்னீராட்டு திருவிழா நடந்துள்ளது.
முன்னதாக, ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆகம விதிப்படி குடமுழுக்கு நடைபெறாத திருக்கோயில்களை கண்டறிந்து, அவற்றில் திருப்பணிகளை மேற்கொண்டு குடமுழுக்கு நடத்தும் பணிகளை கடந்த நான்கரை ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையிலான இந்து சமய அறநிலையத்துறை சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. அவ்வகையில், இன்று காலை சென்னை திருவிக நகர் தொகுதிக்கு உட்பட்ட பெரம்பூர், சேமாத்தமன் திருக்கோயிலில் 4000வது குடமுழுக்கு நன்னீராட்டு விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா, தாயகம் கவி எம்எல்ஏ மற்றும் சிவாச்சாரியார்கள் உள்பட ஏராளமான மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இக்கோயிலில் கடந்த திங்களன்று முதல்கால யாகவேள்வி நடத்தப்பட்டது. கடந்த செவ்வாயன்று 2ம் கால யாக வேள்வி மற்றும் 3ம் கால யாக வேள்வியும் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, இன்று காலை 4ம் கால யாக வேள்வியுடன், சேமாத்தம்மன் கோயிலின் ராஜ கோபுரம் மற்றும் இதர கோபுரங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டன. இவ்விழாவில் பங்கேற்ற அனைத்து பக்தர்களுக்கு பிரசாதங்கள் மற்றும் சமபந்தி உணவு பரிமாறப்பட்டது. இதில் கௌமார மடம், சிரவை ஆதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள், வேளக்குறிச்சி ஆதீனம் தவத்திரு சத்தியஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், திருப்பெரும்புதூர் ஜீயர் தவத்திரு அப்பன் உலகறிய ராமானுஜ எம்பார் சுவாமிகள், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், கூடுதல் ஆணையர்கள் துரை.ரவிச்சந்திரன், பொ.ஜெயராமன், சி.கல்யாணி, இணை ஆணையர் ஜ.முல்லை, சிறப்பு பணி அலுவலர் சி.லட்சுமணன், கோயில் செயல் அலுவலர் சௌந்தரபாண்டி உள்பட ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
