×

ஊட்டி அரசு பள்ளி மைதானத்தை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது

*சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

ஊட்டி : நீலகிரி மாவட்டம், ஊட்டியில் ஏடிசி பகுதியில் விளையாட்டு மைதானம் உள்ளது. 2.45 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த மைதானம் ஊட்டி அரசு மேல்நிலை பள்ளி கட்டுபாட்டில் உள்ளது.

தாவரவியல் பூங்கா சாலையில் எச்ஏடிபி., மைதானம் உருவாக்கப்படுவதற்கு முன்பு வரை ஹாக்கி, கால்பந்து, கைப்பந்து உள்ளிட்ட அனைத்து விதமான விளையாட்டு போட்டிகளும் இம்மைதானத்திலேயே நடைபெற்று வந்தன.

அதன்பின், எச்ஏடிபி மைதானம் அமைக்கப்பட்டதற்கு பிறகு, காந்தி மைதானத்தை அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். பெரிய அளவில் விளையாட்டு போட்டிகள் ஏதுவும் நடத்தப்படுவதில்லை.

இந்த சூழலில் சீசன் சமயங்களில் பார்க்கிங் செய்வதற்கும், தீபாவளி சமயங்களில் பட்டாசு கடைகள் அமைக்கவும் என இம்மைதானம் விளையாட்டு அல்லாத பிற நிகழ்வுகளுக்கு பயன்படுத்தப்படுவதாகவும், அருகில் உள்ள தனியார் பள்ளி பயன்படுத்தி கொள்ள அனுமதிக்க வேண்டும் எனவும் சென்ைன உயர்நீதிமன்றத்தில் கடந்த 2021ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.

இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் அரசு பள்ளிக்கு சொந்தமான மைதானத்தை, தனியார் பள்ளி பயன்படுத்த எப்படி அனுமதிக்க முடியும் என கேள்வி எழுப்பியது.

அப்போது தனியார் பள்ளி பயன்படுத்தி கொள்ள வழங்கப்பட்ட அனுமதியை திரும்ப பெறுவதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்தது. இதனை தொடர்ந்து அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமே மைதானத்தை பயன்படுத்த வேண்டும்.

பள்ளி கல்வித்துறை முறையாக மைதானத்தை பராமரிக்க வேண்டும். மைதானம் இல்லாமல் செயல்படும் தனியார் பள்ளி அங்கீகாரத்தை ரத்து செய்வது குறித்து முடிவெடுக்க வேண்டும் என கடந்த 2021 சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து நுழைவுவாயில் கதவுகள் சரி செய்யப்பட்டன. தற்போது வரை இந்த மைதானத்தில் எவ்வித போட்டிகளும் நடைபெறாத நிலையில், செடி கொடிகள் வளர்ந்து பராமரிப்பின்றி காட்சியளிக்கின்றன. அவ்வப்போது அரசு பள்ளி மாணவர்கள் மட்டும் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த மைதானத்தை தனியார் பள்ளி மீண்டும் பயன்படுத்த நீண்டகாலமாக முயன்று வருகிறது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை மறைத்து மைதானத்தை பயன்படுத்த அனுமதி கோரி மாவட்ட நிர்வாகம், பள்ளி கல்வித்துறையை தனியார் பள்ளி நிர்வாகம் அணுகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மைதானத்திற்குள் செல்ல வழியும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே மைதான வசதி இல்லாத தனியார் பள்ளிக்கு, மைதானத்தை பயன்படுத்த அனுமதிக்க கூடாது என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,`தற்போதும் 2.45 ஏக்கர் பரப்பளவில் மைதானம் உள்ளதா என்பதை நில அளவை செய்து ஆக்கிரமிப்புகள் இருக்கும் பட்சத்தில் அவற்றை அகற்றிட வேண்டும். அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்’ என்றனர்.

Tags : NEILGIRI DISTRICT, FEEDER ,Fed Government High School ,HATP ,Botanical Garden Road ,
× RELATED நெல்லையில் முறையாக சிகிச்சை அளிக்காத...