×

தாராபுரம் அருகே பட்டிக்குள் புகுந்து வெறிநாய்கள் கடித்து குதறியதில் 10 ஆடுகள் பலி

*15 ஆடுகள் படுகாயம்

தாராபுரம் : தாராபுரம் அடுத்த ரெட்டாரவலசு கிராமத்தில் வெறிநாய்கள் பட்டிக்குள் புகுந்து கடித்து குதறியதில் 10 ஆடுகள் உயிரிழந்தன. 15 ஆடுகள் படுகாயம் அடைந்தன.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள ரெட்டாரவலசு கிராமத்தில் ஆண்டி கவுண்டன் தோட்டத்தை சேர்ந்தவர் மகுடபதி (30), இவரது தாய் ஈஸ்வரி (55). இருவரும் தோட்டத்து பண்ணை வீட்டில் வசிக்கின்றனர். இவர்கள் 35க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வந்தனர்.

வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு ஆடுகளை மேய்ச்சல் நிலத்திலிருந்து ஓட்டிச் சென்று பட்டிக்குள் அடைத்து விட்டு தூங்க சென்றனர்.

நள்ளிரவில் ஆடுகளின் அலறல் சத்தம் கேட்டு எழுந்த ஈஸ்வரி, பட்டிக்கு சென்று பார்த்த போது, 10க்கும் மேற்பட்ட தெருநாய்கள் பட்டிக்குள் புகுந்து ஆடுகளை கடித்து குதறிக் கொண்டிருந்தன. ஈஸ்வரி அவற்றை சத்தம் போட்டு விரட்டினார்.

இருப்பினும், 10 ஆடுகள் சம்பவ இடத்திலேயே பலியாகி கிடந்தது. மேலும், 15 ஆடுகள் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடியவாறு இருந்தது.

இதுகுறித்து ஈஸ்வரி அளித்த தகவலின் பேரில் கொளத்துப்பாளையம் கால்நடை உதவி மருத்துவர் தேவி படுகாயம் அடைந்த ஆடுகளுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார். இப்பகுதியில் தெரு நாய்கள் தினமும் விவசாயிகள் வளர்க்கும் ஆடுகளை கடித்து குதறி வேட்டையாடி வருகின்றன.

இதனால், கால்நடை வளர்ப்போர் மிகுந்த நஷ்டம் அடைந்து வருகின்றனர். 2 நாட்களுக்கு முன் கருவேலம் பள்ளம் பகுதியைச் சேர்ந்த அரிச்சந்திரன் என்பவரது 20 ஆடுகளை தெரு நாய்கள் வேட்டையாடிய நிலையில், இது 2வது சம்பவமாகும்.

தொடர்ந்து வெறிநாய்களின் அட்டகாசத்தால் சுற்றுவட்டார விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். நாய்கள் கடித்து உயிரிழந்த மற்றும் காயமடைந்த ஆடுகளுக்கு அரசு மீண்டும் இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

Tags : Tarapuram ,Rettaravalasu ,Rettaravalasu village ,Tirupur district ,
× RELATED நெல்லையில் முறையாக சிகிச்சை அளிக்காத...