×

ஆட்டி படைக்கும் இந்தியா ஆறுதல் தேடும் நியூசிலாந்து: 4வது டி20 போட்டியில் இன்று

விசாகப்பட்டினம்: இந்தியா – நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 4வது டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெறுகிறது. இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதுவரை நடந்த 3 போட்டிகளிலும் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி அமர்க்கள வெற்றிகளை பதிவு செய்து, 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி உள்ளது. இந்நிலையில், இந்த இரு அணிகள் இடையிலான 4வது டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடக்கவுள்ளது.

கடந்த 3 போட்டிகளிலும் இந்திய அணியின் அபிஷேக் சர்மா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷண் உள்ளிட்டோர், நியூசி வீரர்களின் பந்துகளை துவம்சம் செய்து ரன் வேட்டையாடி தங்கள் வல்லமையை பறைசாற்றினர். அதேபோல் பந்து வீச்சில் இந்தியாவின் குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி நேர்த்தியாக பந்துகளை வீசி நியூசி டாப் ஆர்டரை நிலைகுலையச் செய்தனர். இந்த வீரர்களின் அட்டகாச ஃபார்ம், எந்த அணியையும் மிரட்டும் வகையில் உள்ளதால், இன்றைய போட்டியிலும் இந்தியா எளிதில் வெல்லும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மேலோங்கி காணப்படுகிறது.

நியூசிலாந்து அணியை பொறுத்தவரை, இந்திய அணியை கட்டுப்படுத்தும் வழி தெரியாமல் விழிபிதுங்கி நிற்பது கண்கூடாக தெரிகிறது. அந்த அணியின் பந்து வீச்சாளர் ஜேகப் டஃபி மட்டும் சிறப்பாக பந்து வீசி வருகிறார். மேட் ஹென்றி, கைல் ஜேமிசன், மிட்செல் சான்ட்னர் உள்ளிட்ட பவுலர்கள் அதிக ரன்களை வாரி வழங்கி இந்திய அணியின் வெற்றியை எளிதாக்கி வருகின்றனர். பேட்டிங்கில், நியூசியின் டேரில் மிட்செல் நம்பத்தக்க வீரராக தொடர்ந்து அசத்தி வருகிறார். எனவே, டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாக அவர் களமிறக்கப்படலாம். இன்றைய போட்டியில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு தனது வல்லமையை மீண்டும் நிரூபிக்க முனையும். அதேசமயம், கடந்த போட்டிகளில் செய்த தவறுகளை திருத்தி ஆறுதல் வெற்றி பெற நியூசி முற்படும். எனவே, இன்றைய போட்டியில் சுவாரசியத்துக்கு பஞ்சம் இருக்காது.

* இரு அணியில் களமாடும் வீரர்கள்
இந்தியா: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், ஷ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்ட்யா, சிவம் தூபே, அக்சர் படேல், ரிங்கு சிங், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்சித் ராணா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, இஷான் கிஷண், ரவி பிஷ்னோய்.

* நியூசிலாந்து: மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், டெவான் கான்வே, ஜேகப் டஃபி, ஜாக் போல்க்ஸ், மேட் ஹேன்றி, கைல் ஜேமிசன், பெவான் ஜேகப்ஸ், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, லாக்கி பெர்குசன், இஷ் சோதி, டிம் செபெர்ட்.
* போட்டி துவங்கும் நேரம்: இரவு 7 மணி

Tags : India ,T20 ,Visakhapatnam ,4th T20 ,New Zealand ,New Zealand cricket ,Suryakumar ,
× RELATED பிட்ஸ்