மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்டர் திலக் வர்மா, நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரின் கடைசி இரண்டு போட்டிகளிலிருந்து விலகியுள்ளார். கடந்த ஜனவரி 7-ஆம் தேதி அவருக்கு அடிவயிறு தொடர்பான சிறு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் தற்போது குணமடைந்து வருகிறார். இருப்பினும், அவர் முழுமையான உடல் தகுதியை எட்ட இன்னும் கூடுதல் காலம் தேவைப்படுவதால், அவருக்கு ஓய்வு அளிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. வரும் பிப்ரவரி மாதம் தொடங்கவுள்ள 2026 டி20 உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு, அவர் முழு ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பிசிசிஐ நிர்வாகமும் பயிற்சியாளரும் இந்த ஓய்வை வழங்கியுள்ளனர்.
பிப்ரவரி 3-ஆம் தேதி திலக் வர்மா மும்பையில் தேசிய அணியுடன் இணைவார் என்றும், பிப்ரவரி 7-ஆம் தேதி தொடங்கும் ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக நடைபெறும் பயிற்சி ஆட்டங்களில் அவர் களமிறங்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அவரது உடல்நிலை குறித்து பிசிசிஐ வெளியிட்ட முந்தைய அறிவிப்பில், அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் நலமாக இருப்பதாகவும், மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திலக் வர்மா அணியில் இல்லாத நிலையில், நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் தொடர்ந்து நீடிப்பார் என்று தேர்வுக் குழு பரிந்துரைத்துள்ளது. இதற்கிடையில், அணியின் பேட்டிங் வரிசையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இஷான் கிஷன் 3-வது வரிசையில் களமிறக்கப்பட்டு தனக்குக் கிடைத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தி வருகிறார். ஆனால், விக்கெட் கீப்பர் பேட்டர் சஞ்சு சாம்சன் கடந்த மூன்று போட்டிகளில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தது அணி நிர்வாகத்திற்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடைசி இரண்டு போட்டிகளிலும் சஞ்சு இதேபோல் சொதப்பினால், உலகக் கோப்பைக்கான ஆடும் லெவனில் அவரது இடம் கேள்விக்குறியாகும். திலக் வர்மா அணிக்குத் திரும்பும்போது இஷான் கிஷனின் பேட்டிங் ஃபார்ம் மற்றும் விக்கெட் கீப்பிங் திறமை சஞ்சு சாம்சனுக்குப் பெரிய சவாலாக அமையும் எனத் தெரிகிறது.

