×

பிளாஸ்டிக் பைகளில் விற்கப்படும் பால் உள்ளிட்ட பொருட்களால் ஏற்படும் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய ஐஐடியிடம் கோரப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை

சென்னை: பிளாஸ்டிக் பைகளில் விற்கப்படும் பால் உள்ளிட்ட உணவு பொருட்களை உட்கொள்வதால் ஏற்படும் பாதிப்பு குறித்து ஆய்வு நடத்துமாறு சென்னை ஐஐடியிடம் கோரப்பட்டுள்ளது என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. பிறந்த குழந்தைகளின் நஞ்சுக்கொடியில், மைக்ரோ பிளாஸ்டிக் எனும் பிளாஸ்டிக் நுண்துகள் கண்டறியப்பட்டதாக செய்திகள் வந்தன. இதையடுத்து, மனிதர்கள், தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் மீது, ‘மைக்ரோ பிளாஸ்டிக்’ கின் பாதகமான தாக்கம் ஏற்பட்டு உள்ளதா? என்பது தொடர்பாக ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் அறிக்கை தாக்கல் செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு, உயர் நீதிமன்ற நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, வனத்துறை சார்பில் சிறப்பு அரசு பிளீடர் டி.சீனிவாசன் ஆஜராகி, அறிக்கை தாக்கல் செய்தார். அதில், மனித ஆரோக்கியத்தில் ‘மைக்ரோ பிளாஸ்டிக்’குகளால் ஏற்படும் பாதகமான தாக்கம் குறித்து விரிவான ஆய்வு நடத்துமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியதையடுத்து, தமிழக உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை கமிஷனர் ஆர்.லால் வீனா, இதுதொடர்பாக விரிவான ஆய்வை மேற்கொள்வதற்காக சென்னை ஐ.ஐ.டியின் உதவியை நாடியுள்ளதாக கூறபப்ட்டிருந்தது.

இவ்விவகாரம் தொடர்பாக ஒன்றிய, மாநில அரசுகள் தரப்பில் தாக்கல் செய்த அறிக்கைகளை பார்வையிட்ட நீதிபதிகள், நீதிமன்றம் கோரிய சில விவரங்கள் இடம்பெறாததற்கு அதிருப்தி தெரிவித்தனர். மேலும், மனிதர்களின் ஆரோக்கியத்தில், ‘மைக்ரோ பிளாஸ்டிக்’கின் பாதகமான தாக்கம் குறித்து இன்னும் அறியப்படவில்லை என்ற ஒன்றிய அரசின் விளக்கம் கவலை அளிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

Tags : IID ,Tamil Nadu government ,Court ,Chennai ,Government of Tamil Nadu ,Chennai High Court ,Chennai IID ,
× RELATED மண்ணிலே கலைவண்ணம் காணும் மண்பாண்ட...