- கவர்னர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதல் அமைச்சர்
- எம்.கே. ஸ்டாலின்
- குடியரசு தினம்
- சென்னை
- ஆர்.என்.ரவி
- 77வது குடியரசு தினம்
- ஆளுநர் ரவி
சென்னை: 77வது குடியரசு தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஆளுநர் ஆா்.என்.ரவி மூவர்ணக் கொடியை ஏற்றினார். ஆளுநர் ரவி தேசியக் கொடி ஏற்றிவைத்த பின் விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டன. மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நாடு முழுவதும் 77வது குடியரசு தின விழா நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை மெரினா கடற்கரை சாலையான காமராஜர் சாலை உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழா கோலாகலமாக நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்துகொள்ள வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு காரின் முன்னும் பின்னும் போலீசாரின் மோட்டார் வாகனம் அணிவகுத்து அழைத்துவரப்பட்டார். காலை 7.52 மணிக்கு விழா மேடைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வந்தார். அந்த பகுதியில் கூடி நிற்கும் பொதுமக்களுக்கும், விழா பந்தலில் அமர்ந்திருக்கும் பார்வையாளர்களுக்கும் அவர் கையசைத்து வாழ்த்துகளை தெரிவித்தார். பின்னர் அணி வணக்கம் ஏற்கும் மேடை அருகே வந்த முதல்வர் ஸ்டாலினை தலைமைச் செயலாளர் முருகானந்தம் வரவேற்றார். பின்னர் காலை 7.54 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, மனைவி லட்சுமி ரவியுடன் வருகை தந்தார். அவருக்கு விமானப்படையினர் மோட்டர் சைக்கிள்கள் அணிவகுத்து அழைத்து வரப்பட்டார். அதைத்தொடர்ந்து, 7.58 மணிக்கு அணி வணக்கம் ஏற்கும் மேடைக்கு அருகே வந்த ஆளுநர் ரவியை முதல்வர் ஸ்டாலின் பசுமை கூடை வழங்கி வரவேற்றார்.
இதனை தொடர்ந்து, தென்னிந்திய பகுதிகளின் ராணுவ மேஜர் ஜெனரல் ஸ்ரீநிவாஸ், கடற்படை அதிகாரி ரியர் அட்மிரல் சதீஷ் எம் சானாய், தாம்பரம் வான்படை நிலைய தலைமை அதிகாரி ஏர் கமோடர் தபன் சர்மா, கடலோர காவல்படை (கிழக்கு) கமாண்டர் பாலகிருஷ்ணன் முருகன், தமிழக டிஜிபி வெங்கட்ராமன், சென்னை போலீஸ் கமிஷனர் அருண், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி மகேஸ்வர் தயாள் ஆகியோரை ஆளுநருக்கு சம்பிரதாயப்படி முதல்வர் ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார். இதைத் தொடர்ந்து, 8 மணிக்கு தேசிய கொடியை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றிவைத்தார். அப்போது ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அந்த நேரத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. 5வது முறையாக ஆளுநர் தேசியக் கொடியை ஏற்றி வைத்துள்ளார்.
பின்னர் ராணுவ படைப்பிரிவு, கடற்படைப் பிரிவு, வான்படை பிரிவினர் அணிவகுத்து வந்து ஆளுநருக்கு வணக்கம் செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு விருதுகளையும் பதக்கங்களையும் வழங்கி கௌரவித்தார். வீரத்தீரச் செயல்களுக்கான அண்ணா பதக்கங்கள் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் வி.சங்கர், பா.சுரேஷ், செ.ரமேஷ்குமார் ஆகியோருக்கும், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மறைந்த பீட்டர் ஜான்சனுக்கும் வழங்கப்பட்டன. இதனை அவர் மனைவி ஜசி பெற்றுக்கொண்டு உள்ளார். கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த கலிமுல்லா, சி. நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த வீரமணி, காந்தியடிகள் காவலர் பதக்கம் விழுப்புரம் மண்டலம் மத்திய நுண்ணறிவு பிரிவை சேர்ந்த பி. நடராஜன், விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் சத்யாநந்தன், கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன், கடலூர் மாவட்டம் புத்தூர் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் நடராஜன், சேலம் மாவட்டம் மத்திய நுண்ணறிவு பிரிவு தலைமை காவலர் கண்ணன் ஆகியோருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மேலும் சிறந்த காவல் நிலையத்திற்கான கோப்பைகள் முதலிடத்தை பிடித்த மதுரை மாநகரம் காவல் ஆய்வாளர் பூமிநாதன், இரண்டாம் இடத்தை பிடித்த திருப்பூர் நகரம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் பிரேமா, மூன்றாவது இடத்தை பிடித்த கோயம்புத்தூர் மாவட்டம் காவல் ஆய்வாளர் சின்ன காமனன் ஆகியோருக்கு விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
விருது வழங்கும் நிகழ்வைத் தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும், தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மையத்தின் பாரம்பரிய நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. தமிழக அரசின் பல்வேறு துறைகளின் சாதனைகளை விளக்கும் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான கம்பீரமான அணிவகுப்பு மாரியாதையை ஆளுநர் ஏற்றுக்கொண்டார். விங் கமாண்டர் பரம்ஜீத் சிங் அரோரா தலைமையில் நடைபெற்ற இந்த அணிவகுப்பில், ப்லைட் லெப்டினன்ட் தமிழ்வாணி துணைத் தளபதியாகச் செயல்பட்டார். இந்த அணிவகுப்பில் ராணுவப் படைப்பிரிவு, கடற்படை, விமானப்படை மற்றும் கடலோரக் காவல் படையின் பிரிவுகள் அணிவகுத்து வந்தன. அப்போது கடற்படை ஊர்தியின் போர்க் கப்பலின் சிறிய வடிவம், வான்படை ஊர்தியின் சிறிய வடிவிலான விமானம், கடலோர காவல்படை ஊர்தியின் சிறிய வடிவிலான படகுகள், ஏவுகணைகள், பீரங்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் அடங்கிய அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து சி.ஐ.எஸ்.எப், சி.ஆர்.பி.எப், ஆர்.பி.எப், தமிழ்நாடு சிறப்பு காவல் பிரிவு, தமிழகப் பேரிடர் மீட்புப் படை, கடலோர பாதுகாப்புக்குழு, கர்நாடக மாநில சிறப்பு காவல் படை, தமிழக கமாண்டோ படை மற்றும் ஊர்காவல் படை உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட படைப்பிரிவினர் அணிவகுத்து சென்றனர். காவல் துறைப் பிரிவில் பி.ஆர்.மீரா தலைமையில் தமிழ்நாடு சிறப்பு காவல் பெண்கள் பிரிவும், எஸ்.பி.என். கண்ணன் தலைமையில் ஆயுதப்படை பிரிவும், குணால் உத்தம் ஸ்ரோட் தலைமையில் குதிரைப்படை பிரிவும் பங்கேற்றன. அதேபோல் பல்வேறு அரசுத் துறைகளின் ஊர்திகள், அரசில் நலத்திட்டங்களை விவரிக்கும் வகையிலான வடிவமைப்புகளுடன் வலம் வந்தன. அணிவகுப்பின் இறுதியில் தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் ஆகியவற்றைச் சேர்ந்த மாணவ, மாணவியர் படைப்பிரிவுகள் அணிவகுத்து வந்தன. சிறைத் துறை, தீயணைப்புத் துறை, வனத் துறை மற்றும் சாலைப் பாதுகாப்புப் படையினரின் படைப்பிரிவுகளும் இதில் இடம்பெற்றன. அதேபோல் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் பாரம்பரிய நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சி உடன் 2026-ம் ஆண்டு குடியரசு தின விழா நிறைவுற்றது.
இந்த விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.வஸ்தவா மற்றும் நீதிபதிகள், வெளிநாட்டு தூதுவர்கள், உயர் அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். மேலும் குடியரசு தின விழாவை காண பொதுமக்கள் மற்றும் ஏராளமான பார்வையாளர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
சென்னை கடற்கரைச் சாலையில் நடைபெற்ற 77வது குடியரசு தினவிழா கலை நிகழ்ச்சியில், பாவேந்தர் பாரதிதாசனின் புகழ்பெற்ற “எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு” பாடலுக்கு பள்ளி மாணவிகள் நடனமாடினர். இந்த விழாவில், பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் இடம்பெற்ற இந்த நடனம், தமிழின் பெருமையை பறைசாற்றும் வகையில் அமைந்தது. அதேபோல ராஜஸ்தான் சாரி நடனம், கர்நாடகா லம்பாணி நடனம், மிதிலா பிராந்தியம் ஜிஜியா நடனம், பெரிய மேளம், தேவராட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் கண் கவரும் வகையில் இருந்ததால் மக்கள் ரசித்தனர்.
வீரதீரச் செயல்களுக்கான அண்ணா பதக்கம் பெற்ற உயிரிழந்த பீட்டர் ஜான்சன் மனைவி கூறியதாவது:
ஜூன் மாதம் குழித்துறையில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த தடுப்பணையில் இரு சிறுவர்கள் தவறுதலாக விழுந்து மூழ்கத் தொடங்கியதை பீட்டர் ஜான்சன் கண்டு உடனடியாக ஆற்றில் குதித்து, இரு சிறுவர்களையும் காப்பாற்றி பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வந்தார். ஆனால், வலுவான ஆற்றோட்டத்தில் சிக்கிய அவர் உயிரிழந்தார். இந்த விருது கிடைத்தது எனக்கு மகிழ்ச்சி ஆனால் எனக்கு பெரிய இழப்பு. நாங்கள் வாடகை வீட்டில் இருக்கிறோம் எங்களுக்கு வீடு மற்றும் பிள்ளைகளுக்கு வேலை தர வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தார்.
காந்தியடிகள் காவலர் பதக்கம் பெற்ற சத்யாநாதன் கூறியதாவது:
இது எனக்கு மறக்க முடியாத நாட்களாக இருக்கும். என்னுடைய அதிகாரிகள், உடன் பணி புரியும் அலுவலர்கள், குடும்ப உறுப்பினர் என அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மதுவிலக்குக்காக சிறப்பாக பணியாற்றியதால் இந்த விருது கிடைத்துள்ளது. தற்போது உள்ள தலைமுறைகள் கெட்டு போவதற்கும், எதிர்காலம் சரியாக இல்லாமல் இருப்பதற்கும் கள்ளச்சாராயம் உள்ளிட்ட போதை பொருட்கள் தான் காரணமாக உள்ளது. போதை அழிவின் பாதை, பயன்படுத்தாத நண்பர்கள் பயன்படுத்தும் நண்பர்களை திருத்த உதவியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது பெற்ற திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த கலிமுல்லா பேசியதாவது:
எல்லா புகழும் இறைவனுக்கே, கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது முதல்வர் மு.க.ஸ்டாலின் கையில் பெற்றது எனக்கும் பெருமையாக உள்ளது. கோயில் கட்டுவதற்கு நிலம் மற்றும் பணம் கொடுத்தேன், சந்தோஷமாக இருக்கிறேன், என்னுடைய பொறுப்பு அதிகரித்து உள்ளதாக உணர்கிறேன். என் குடும்ப உறுப்பினருக்கு, நண்பர்கள் மற்றும் என்னுடைய அலுவலகத்தில் இருக்கும் அனைவருக்கு இந்த விருதை சமர்ப்பிக்கிறேன். தமிழ்நாட்டுக்கு மத நல்லிணக்க மிகவும் தேவையான ஒன்று, எல்லாரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
