திருவண்ணாமலை, ஜன.24: திருவண்ணாமலையில் வரும் 1ம் தேதி தை மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்தது என அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதையொட்டி, பக்தர்கள் வருகை அதிகரிக்க வாய்ப்புள்ளதால், விரிவான முன்னேற்பாடுகளை அதிகாரிகள் செய்துள்ளனர். திருவண்ணாமலையில் மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுவது வழக்கம். மேலும், சமீப காலமாக கிரிவல பக்தர்களின் பலமடங்கு அதிகரித்துள்ளது. அதன்படி, தை மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் பிப்ரவரி 1ம் தேதி காலை 6.13 மணிக்கு தொடங்கி, 2ம் தேதி அதிகாலை 4.45 மணிக்கு நிறைவடைகிறது. எனவே, வரும் 1ம் தேதி இரவு கிரிவலம் செல்ல உகந்தது என அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதையொட்டி, வழக்கம் போல வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும், பவுர்ணமி சிறப்பு ரயில்களும் வேலூர் மற்றும் விழுப்புரம் வழியாக சென்னை- திருவண்ணாமலை இடையே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும், விடுமுறை தினமான ஞாயிற்று கிழமையன்று பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அமைந்திருப்பதால், வழக்கத்தைவிட கூடுதலான பக்தர்கள் வருகை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதையொட்டி, பக்தர்களின் தரிசனத்துக்காக கோயில் நிர்வாகம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது.
