- அஇஅதிமுக
- சனாதனம்
- திருமாவளவன்
- திருச்சி
- வி.கே.சி
- திருச்சி விமான நிலையம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ஜனநாயக
திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் நேற்று அளித்த பேட்டி: தமிழகத்தில் இந்தி திணிப்பு இப்போதும் தொடர்கிறது. சமஸ்கிருத மயமாதல் தீவிரமாக நடந்து வருகிறது. தேசிய அளவில் ஜனநாயக சக்திகள் தங்களுடைய மொழியையும், கலாசாரத்தையும் காக்க ஒன்றிணைய வேண்டிய அவசியம் இருக்கிறது. இரட்டை இன்ஜின் ஆட்சி என பிரதமர் கூறுவது டெல்லியில் ஒரு இன்ஜின், தமிழ்நாட்டில் ஒரு இன்ஜினா அல்லது தமிழ்நாட்டிலேயே இரட்டை இன்ஜினா என்று தெரியவில்லை.
தே.ஜ. கூட்டணி அதிமுக தலைமையில் இயங்குகிறது என கூற முடியாத நிலை தான் உள்ளது. இது அதிமுகவுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி மலரும் என பேசக்கூடிய நிலை இல்லாமல் போய் விட்டது. அதிமுகவின் நிலையை எண்ணி கவலைப்படுகிறோம். திராவிட இயக்கம் சனாதனத்தின் பிடியில் சிக்கியுள்ளது. பாமகவின் ஒரு அணி தே.ஜ. கூட்டணியில் இணைந்து விட்டது.
மற்றொரு அணியை திமுக கூட்டணியில் இணைப்பது குறித்து திமுக தலைமை தான் முடிவெடுக்க வேண்டும். பாஜ, பாமக அங்கம் வகிக்கும் கூட்டணியில் இடம் பெற மாட்டோம் என்று 14 ஆண்டுகளுக்கு முன்பே முடிவெடுத்து விட்டோம். தவெக தலைவர் விஜய், இதுவரை பாஜ குறித்தோ, பாஜவின் செயல்பாடு குறித்தோ விமர்சிக்கவில்லை.
விமர்சனம் செய்ய வேண்டிய நேரத்தில் கூட விமர்சிக்காமல் இருக்கிறார். அவர் தனித்து ஒரு அணியை உருவாக்குவாரா அல்லது தனித்து போட்டியிடுவாரா என்று தான் யோசிக்கிறேன். தேர்தலில் போட்டியிட மூன்று இலக்கங்களில் தொகுதிகள் கேட்க முடியாது என்பதால் இரட்டை இலக்கத்தில் கேட்கிறோம். தமிழ்நாட்டு மக்களின் நலனை முன்னிறுத்தி தேர்தல் அறிக்கையை வெளியிடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.
