நாகர்கோவில்: தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தின் கடலோரத் தொகுதியான கிள்ளியூர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பாரம்பரியமாக தேசியக் கட்சிகளின் பலப்பரீட்சை களமாகத் திகழும் இத்தொகுதியில், 2026 தேர்தலிலும் பலமுனைப் போட்டி நிலவுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
கிள்ளியூர் தொகுதி உருவான காலத்திலிருந்தே திராவிடக் கட்சிகளை விட தேசியக் கட்சிகளுக்கே இங்கு மவுசு அதிகம். குறிப்பாக, இந்திய தேசிய காங்கிரஸ் இத்தொகுதியில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கி வருகிறது. 1991 – 2001 த.மா.கா மற்றும் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்ட குமாரதாஸ் இத்தொகுதியில் ஹாட்ரிக் வெற்றி பெற்றார். 2006 – 2011 காங்கிரசின் எஸ்.ஜான்ஜேக்கப் தொடர்ந்து இருமுறை வெற்றி பெற்று காங்கிரஸ் செல்வாக்கை உறுதிப்படுத்தினார். பின்னர் தமாகாவில் இணைந்தார்.
2016 – 2021 தற்போதைய எம்.எல்.ஏ எஸ்.ராஜேஷ்குமார் (காங்கிரஸ்) போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. கடந்த 2 தேர்தல்களிலும் பெரும் வாக்கு வித்தியாசத்தில் ராஜேஷ்குமார் வெற்றி பெற்றுள்ளார். மூன்றாவது முறையாக அவரே மீண்டும் களமிறங்க திட்டமிட்டுள்ளார். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.ராஜேஷ்குமார் 1,01,541 வாக்குகளைப் பெற்று (59.76%), அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட தமாகா வேட்பாளர் ஜூட் தேவை சுமார் 55,400 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.
கிள்ளியூர் தொகுதியில் மீனவ சமூகத்தினர் மற்றும் நாடார் சமூகத்தினர் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர். திமுக மற்றும் அதிமுக ஆகியவை நேரடியாக இங்குப் போட்டியிடுவதைத் தவிர்த்து, பெரும்பாலும் கூட்டணிக் கட்சிகளுக்கே ஒதுக்கி வந்துள்ளன. ஜி.கே.வாசனின் தமாகா தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீடிக்கிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜ தலைமையிலான கூட்டணியில் கிள்ளியூர் தொகுதி தமாகாவிற்கு ஒதுக்கப்பட்டால், அக்கட்சி இங்குப் போட்டியிட வாய்ப்பு உண்டு.
இதற்காக முன்னாள் எம்எல்ஏ ஜாண்ஜேக்கப்பின் வாரிசை வேட்பாளராக களமிறக்கவும் திட்டம் உள்ளதாம். 2021 தேர்தலில், தமாகா சார்பாக போட்டியிட்ட ஜூட் தேவ் 46,141 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தார். பின்னர் அவர் திமுகவில் இணைந்து செயல்பட்டு வருகிறார். இத்தொகுதியில் காங்கிரஸ் பாரம்பரியமாக வலுவாக உள்ளது. திமுக-காங்கிரஸ் கூட்டணி ஒருபுறமும், நாம் தமிழர் கட்சி மறுபுறமும் தீவிரமாக உள்ள நிலையில், என்டிஏ கூட்டணி சார்பில் தமாகா களமிறங்கினால் தொகுதி கடும் போட்டியைச் சந்திக்கும் என்று கணக்கு போடுகிறார்களாம்.
