×

டிடிவி எறிந்த ‘வேட்பாளர்’ குண்டு; முசிறி தொகுதியில் முக்கோண மோதல்? குழப்பத்தில் அதிமுக நிர்வாகிகள்

முசிறி: டிடிவி எறிந்த வேட்பாளர் குண்டால் திருச்சி மாவட்டத்தின் முக்கிய தொகுதியான முசிறியில் அதிமுக மற்றும் அதன் கூட்டணியான பாஜ இடையே நிலவும் ‘சீட்’ விவகாரம் தற்போது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் முசிறியில் கடந்தாண்டு டிச.28ம் தேதி நடைபெற்ற அமமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற டிடிவி தினகரன், திடீரென முன்னாள் எம்.எல்.ஏ ராஜசேகரனை முசிறி தொகுதி வேட்பாளராக அறிவித்து விட்டு சென்றார்.

அப்போது ‘தனி வழி’ யாக தெரிந்த டிடிவி தினகரன், தற்போது அதிமுக தலைமையிலான கூட்டணியில் ஐக்கியமாகியுள்ளார். ஏற்கனவே அதிமுக-பாஜ கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், டிடிவி தினகரன் உள்ளே வந்திருப்பது முசிறி அதிமுகவினரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக தெரிகிறது. இதனால் குழப்பத்தில் அதிமுக ‘ஹெவிவெயிட்’ வேட்பாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

முசிறி தொகுதியை தங்களது கோட்டையாக கருதும் அதிமுகவில், இம்முறை சீட் வாங்க ஒரு பெரும் பட்டாளமே வரிசை கட்டி நிற்கிறது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள், சீனியர் நிர்வாகிகள் இத்தனை போராட்டங்களுக்கு இடையிலும் பணியாற்றினர். இந்த முறை நமக்கு தான் வாய்ப்பு என்று நம்பி கொண்டிருந்த முன்னாள் அமைச்சர்கள், சீனியர் நிர்வாகிகளுக்கு டிடிவி தினகரனின் குண்டு பெரும் இடியாகவும் இறங்கியுள்ளது.

தொகுதியை கூட்டணிக்கு விட்டு கொடுப்பதா? அல்லது பலமான வேட்பாளரை களம் இறக்குவதா? என்ற கேள்வி இப்போது அதிமுக மாவட்ட தலைமைக்கு பெரும் தலைவலியாகவும் மாறியுள்ளது. இதில் ஒருவேளை தொகுதி பங்கீட்டில் முசிறி அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டால் அதிமுகவின் அடிமட்ட தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மனப்பூர்வமாக ராஜசேகரனின் வெற்றிக்காக உழைப்பார்களா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உருவெடுத்துள்ளது.

இரட்டை இலைக்காக பல ஆண்டுகளாக பணியாற்றிவிட்டு, வேறு சின்னத்திற்கு ஓட்டு கேட்க வேண்டிய சூழல் வருமோ? என்ற அச்சத்தில் முசிறி சீனியர் நிர்வாகிகள், 2வது கட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமியை நம்புவதா? அல்லது டிடிவி தினகரனின் வேகத்தை ஏற்பதா? என்று தெரியாமல் ‘முசிறி’ அரசியல் களம் இப்போது முச்சந்தியில் நிற்கிறது. இதில் அடுத்த கட்ட நகர்வாக, முசிறி தொகுதியில் அதிமுகவின் முக்கிய பிரமுகர்கள் இந்த பிரச்னை குறித்து எடப்பாடியை நேரில் சந்தித்து மனு அளிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இது குறித்து அதிமுக நிர்வாகிகள் கூறுகையில், ‘‘கூட்டணியில் இணைவதற்கு முன் அமமுக சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் ராஜசேகரன், தவெக நிர்வாகிகளுடன் ரகசிய தொடர்பில் இருந்து வருகிறார். எனவே, அதிமுகவுக்கு தான் சீட் தர வேண்டும் என எடப்பாடியை நேரில் சந்தித்து வலியுறுத்துவோம். எப்படியாவது நாங்கள் கேட்டு பெற்று விடுவோம்’’என்றனர்.

Tags : TTV ,Musiri ,AIADMK ,Kundal ,BJP ,Trichy district ,Trichy ,
× RELATED குடியரசு தின விழாவை முன்னிட்டு...