×

குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழகத்தில் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு; சென்னையில் முதல்வர் முன்னிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக்கொடி ஏற்றுகிறார்

சென்னை: குடியரசு தினவிழாவை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னியில் இன்று ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக்கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். மாநிலம் முழுவதும் அசம்பாவிதங்களை தடுக்க 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் மெரினா காமராஜர் சாலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக்கொடி ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார். விழா மேடைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 7.52 மணிக்கு விழா மேடைக்கு வருகிறார்.

முதல்வரை தலைமைச்செயலாளர் முருகானந்தம் வரவேற்கிறார். காலை 7.54 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, மனைவி லட்சுமி ரவியுடன் வருகிறார். அதைத்தொடர்ந்து, 7.58 மணிக்கு அணி வணக்கம் ஏற்கும் மேடைக்கு அருகே வரும் ஆளுநர் ஆர்.என்.ரவியை, முதல்வர் மு.க.ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்கிறார். அதைதொடர்ந்து காலை 8 மணி அளவில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக்கொடி ஏற்றி வைக்கிறார். அப்போது இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் தேசியக்கொடிக்கு மலர் தூவும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து முப்படை வீரர்கள் மற்றும் தமிழக காவல் துறையின் துறை சார்ந்த வாகன அணி வகுப்பு நடைபெறும். அணிவகுப்பு நிகழ்ச்சிகள் முடிந்ததும் முதலமைச்சரின் வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கங்கள், கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம், காந்தியடிகள் காவலர் பதக்கங்கள், அதிக உற்பத்தி திறன் பெறும் விவசாயிக்கான வேளாண்மை துறையின் சிறப்பு விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி கவுரவிப்பார்.

நிகழ்ச்சி நடைபெறும் பகுதியான மெரினா காமராஜர் சாலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் என 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நிகழ்ச்சியை பார்க்க வரும் பொதுமக்கள் உள்ளே வராதப்படி சாலையின் இருபுறங்களிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக ஒன்றிய உள்துறை எச்சரிக்கையை தொடர்ந்து தமிழ்நாடு காவல்துறை டிஜிபி வெங்கடராமன் உத்தரவுப்படி மாநகர கமிஷனர்கள், 4 மண்டல ஐஜிக்கள், மாவட்ட எஸ்பிக்கள் தலைமையில் சுற்றுலா தலங்கள், கடற்கரை பகுதிகளில் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணி மேற்கொண்டுள்ளனர். இதுதவிர வெளிநாட்கள் நடமாட்டத்தை கண்காணிக்க மாவட்டம் மற்றும் மாநில எல்லைகளில் சோதனை வாசடிகள் அமைத்து ஆய்வு செய்து வருகின்றனர்.

சென்னையை பொருத்தவரை சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி கூடுதல் கமிஷனர்கள், இணை கமிஷனர்கள் மற்றும் துணை கமிஷனர்கள் தலைமையில் உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் சுமார் 7,500 போலீசார் கடந்த 2 நாட்களாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி சென்னை விமான நிலையம், ரயில் நிலையங்கள், பேருந்து முனையங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், கடற்கரை பகுதிகள் மற்றும் அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் கூடுதலாக காவலர்கள் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நேற்று முதன்தினம் முதல் நேற்று நள்ளிரவு வரை சென்னையில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகள் மற்றும் ஓட்டல்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, சந்தேக நபர்களின் நடமாட்டம் குறித்து ஏதேனும் தகவல் இருந்தால் காவல்துறைக்கு தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தவிர சென்னை பெருநகர் முழுவதும் அந்தந்த காவல் சரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வாகனங்கள் மூலம் ரோந்து பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாதவரம், திருவொற்றியூர், மதுரவாயல், மீனம்பாக்கம், துரைப்பாக்கம், நீலாங்கரை உள்ளிட்ட இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து காவல் துறையினர் மூலம் வாகனத் தணிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.

டிரோன் பறக்க தடை
குடியரசு தின விழாவை முன்னிட்டு இன்று வரை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள உழைப்பாளர் சிலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள், ராஜ்பவன் முதல் மெரினா கடற்கரை வரை மற்றும் தமிழக முதலமைச்சரின் இல்லத்தில் இருந்து மெரினா கடற்கரை வரையில் செல்லும் வழித்தடங்கள் ‘சிவப்பு மண்டலமாக’ அறிவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் டிரோன் கேமராக்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி பொருட்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags : Republic Day ,Tamil Nadu ,Governor R. N. Ravi ,Chennai ,Chief Minister of ,MLA ,Kamarajar Road ,K. ,Stalin ,
× RELATED மொழிப்போர் தியாகிகளின்...