- காவடி
- மண்டபம்ஸ்
- பழனி தைப்பூச திருவிழா
- மதுரை
- நீதிமன்றம்
- காவடி மண்டபங்கள்
- சுவாமிநாதன்
- திண்டுக்கல்
- உயர் நீதிமன்றம்
- தைப்பூசம்
- பழனி தண்டாயுதபாணி சுவாமிகள்
மதுரை: பழநி தைப்பூச திருவிழாவையொட்டி முக்கிய சாலைகளில் 11 நிரந்தர காவடி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளதாக ஐகோர்ட் கிளையில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல்லைச் சேர்ந்த சுவாமிநாதன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழா ஜன. 26ல் (இன்று) கொடியேற்றத்துடன் துவங்கி பிப். 4 வரை நடைபெறும். பிப். 1ல் தைப்பூசம் மற்றும் திருத்தேரோட்டம் நடைபெறும். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவர். நெரிசலால் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதை தடுக்க காவல்துறை, கோயில் நிர்வாகம் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், போதிய உணவு, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றவும், சண்முகா நதி, இடும்பன் குளத்தில் பக்தர்கள் நீராட பாதுகாப்பு வசதி செய்யுமாறும் திண்டுக்கல் கலெக்டர், எஸ்பி, கோயில் செயல் அலுவலர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி எஸ்.மதி முன் விசாரணைக்கு வந்தது. கோயில் செயல் அலுவலர் தாக்கல் செய்த பதில் மனுவில், ‘‘கோயில் நிர்வாகம் பக்தர்களுக்காக பல்வேறு வசதிகளை செய்துள்ளது. மனுதாரர் மனுவில் கற்பனையாக, தவறான மற்றும் ஆதாரமற்ற தகவல்களை தெரிவித்துள்ளார். பழநிக்கு செல்லும் முக்கிய சாலைகளில், பக்தர்களின் வசதிக்காக கோயில் நிர்வாகம் தரப்பில் 11 நிரந்தர காவடி மண்டபங்களை (குளியலறை, கழிப்பறைகள் மற்றும் வாகன நிறுத்துமிட வசதிகளுடன்) இலவசமாக அமைத்துள்ளது. இவற்றை பராமரிக்க சுழற்சி முறையில் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தைப்பூச திருவிழாவின்போது கோயில் நிர்வாகம் பக்தர்களுக்கு இலவசமாக அன்னதானம் வழங்குகிறது.
பக்தர்களின் பாதுகாப்பிற்காக கோயில் நிர்வாகம் பாதுகாவலர்களை நியமித்துள்ளது. கூடுதலாக போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர். சண்முகா நதி, இடும்பன்குளத்தில் பக்தர்கள் புனித நீராட வசதிகள் செய்யப்பட்டுள்ளது. சண்முகா நதியிலிருந்த அமலை செடிகள் அகற்றப்பட்டுள்ளன. தேவையான அளவிற்கு தூய்மை பணியாளர்கள், பாதுகாப்பு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பக்தர்களுக்கு அசவுகரியம் ஏற்படாதவாறு, விரைவாக சுவாமி தரிசனம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு ஒளிரும் குச்சிகள் வழங்கப்படுகிறது. எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’’ என கூறப்பட்டிருந்தது.
இதை பதிவு செய்த நீதிபதி, கூட்டத்தை ஒழுங்குபடுத்துதல், ஆற்றில் புனித நீராடும் பக்தர்களை முறைப்படுத்துதல், தூய்மைப் பணியில் மனுதாரர் மற்றும் அவரது குழுவை சேர்ந்தவர்கள் கோயில் நிர்வாகத்திற்கு உதவ வேண்டும் எனக்கூறி மனுவை முடித்து வைத்தார்.
