×

சட்ட மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநருக்கு அனைத்துக்கட்சி உறுப்பினர்கள் கண்டனம்: அதிமுக எம்எல்ஏவும் ஆதரவு தெரிவித்தார், கூட்டுறவு சங்கங்களின் மசோதா மீண்டும் நிறைவேற்றம்

கூட்டுறவுச் சங்கங்களின் நிர்வாகத்தைச் சீரமைக்கவும், முறைகேடுகளைத் தவிர்க்கவும், பதிவாளருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கவும் வழிவகை செய்யும் சட்ட மசோதா கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சட்ட மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி 2025ம் ஆண்டு ஜூன் திருப்பி அனுப்பினார். இந்த சட்ட முன்முடிவு பேரவையில் மறு ஆய்வு செய்யப்பட்டது. இதில் உறுப்பினர்கள் பேசினர்.

செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): எந்த சட்டங்களைத் தீட்டினாலும் ஆளுநர் திருப்பியனுப்புவதை எந்த விதத்திலும் ஏற்க முடியாது. இதை வன்மையாக கண்டிக்கிறேன். எல்லோரும் ஃபர்ஸ்ட் கிளாஸ் மாநிலம் என்று சொல்கிறார்கள். இப்படி ஃபர்ஸ்ட் கிளாஸ் மாநிலத்தில் வொர்ஸ்ட் கிளாஸ் ஆளுநர் இருப்பதுதான் வருந்தத்தக்கது.

ஜி.கே.மணி (பாமக): ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு அனுப்பப்படுகின்ற தீர்மானத்தை திருப்பியனுப்புவதும், புறக்கணிப்பதும் ஏற்புடையதாக அமையாது. ஆளுநர் என்பவர் அரசுக்கு ஒரு இணைப்புப் பாலமாக, குறிப்பாக, மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் இணைப்புப் பாலமாக இருந்து செயல்படுவது பொருத்தமாக அமையும்.

எஸ்.எஸ்.பாலாஜி (விசிக): தொடர்ந்து ஆளுநர், இந்த சட்டமன்றம் தனது பணிகளை செய்யவிடாமல் முடக்குகின்ற பணியிலே ஈடுபட்டு வருகின்றார். அந்த வகையிலே இது கண்டிக்கத்தக்கது. ஆளுநரின் இந்த நடவடிக்கையை விசிக சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.

வி.பி.நாகை மாலி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): சட்டமன்றம் நூறாண்டுகாலம் பின்பற்றுகிற அந்த மகத்தான பெருமைகளை சீர்குலைக்கிற வகையிலே ஆளுநர் இன்றைக்கு நடந்துகொண்டிருக்கிறார். ஆளுநர் இப்படி சட்டமன்றம் நிறைவேற்றுகின்ற சட்டமன்றத் தீர்மானங்களையெல்லாம் திருப்பி அனுப்புவது ஜனநாயகத்திற்கு கொஞ்சம்கூட அழகல்ல. ஆளுநருடைய இந்த நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறேன்.

சதன் திருமலைக்குமார் (மதிமுக): தொடர்ந்து நாகரிகம் இல்லாமல் செயல்படுகின்ற ஆளுநரை மதிமுக வன்மையாக கண்டிக்கிறது. அமைச்சரவை ஒப்புதலோடு கொடுக்கின்ற உரையை படிக்காமல் தவிர்த்துக்கொண்டு செல்வது அநாகரிகமான செயலாகும். அவர் வேண்டுமென்றே சில சட்டமுன்வடிவுகளை திருப்பி அனுப்புவது மிகவும் கண்டனத்துக்குரியது.

எம்.எச்.ஜவாஹிருல்லா(மமக): வேறு எந்த ஆளுநருக்கும் இல்லாத அளவிற்கு உச்ச நீதி மன்றத்தால் பல முறை குட்டு பெற்றவர் ஆர்.என்.ரவி. பல வழக்குகளில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சட்டமுன்வடிவுகளை அப்படியே கிடப்பில் வைப்பதை வன்மையாகக் கண்டித்திருக்கிருக்கிறது. அந்த கண்டனத்திற்குப் பிறகும் இப்போது திருப்பி அனுப்பியிருக்கிறார். சட்டமன்றப் பேரவையை அவமதித்திருக்கின்றார்.

எனவே, அவருக்கு எதிராக, இந்த ஆளுநர் திரும்பப் பெறப்பட வேண்டுமென்பதை நாம் மீண்டும் மீண்டும் வலியுறுத்த வேண்டும். ஒலிவாங்கி ஒன்றும் அந்த நேரத்தில் அணைத்து வைக்கப்படவில்லை. உண்மைக்குப் புறம்பான தகவல்களை சொல்லக்கூடிய ஒருவராக ஆளுநர் ரவி இருக்கின்றார். இந்தச் சபையை அவர்தான் அவமதித்திருக்கின்றார்.

சபாநாயகர் அப்பாவு: மைக்கை யாரும் ஆப் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. சபையினுடைய சபாநாயகர் மைக்கில் பேச ஆரம்பித்தவுடனேயே, சிஸ்டத்தின்படி எல்லா மைக்குகளும் ஆப் ஆகிவிடும். ஆகவே, நாம் திட்டமிட்டு எதையும் செய்யவில்லை. ஆளுநர் உரையை வாசித்திருந்தால், நான் பேச வேண்டிய வாய்ப்பு ஏற்பட்டிருக்காது; அதைவிட்டுவிட்டு பேசுவதற்கு முற்பட்ட காரணத்தினால்தான், அதில் நான் தலையிட்டு ஆளுநர் உரையை மட்டும் வாசிக்குமாறு சொன்னேன். மைக் ஆப் செய்யப்படவில்லை.

ஈ.ஆர். ஈஸ்வரன் (கொமதேக): சில நேரங்களில் சில சட்டமுன்வடிவுகளை எதிர்க்கட்சிகளே விவாதித்து ஏற்றுக்கொள்கின்றன. ஆனால், எதிரிக் கட்சி ஏற்றுக்கொள்வதேயில்லை. அவ்வாறு எதிரிக் கட்சியினுடைய தலைவராக தமிழ்நாட்டினுடைய ஆளுநர் இருப்பது ஒரு வருத்தமான விஷயம். தமிழ்நாட்டினுடைய வளர்ச்சிக்கு எந்த அளவில் எல்லாம் தடைகள் ஏற்படுத்த முடியுமோ, அத்தனை தடைகளையும் இவர் ஏற்படுத்திக்கொண்டே இருக்கிறார்.

தி.வேல்முருகன் (தவாக): தமிழ்நாட்டுக்கும், தமிழ்மொழிக்கும், தமிழருக்கும், தமிழ் இனத்திற்கும் நேர் எதிராகச் செயல்படுகின்ற ஆளுநரை உடனடியாக ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும். அமைச்சர் கொண்டு வருகின்ற இந்தச் சட்டமுன்வடிவை வரவேற்று, ஆளுநருக்கு என்னுடைய கண்டனத்தை பதிவு செய்கிறேன்.

பி.அய்யப்பன் (அதிமுக ஓபிஎஸ் அணி): கடந்த 3 ஆண்டுகளாக ஆளுநர் ஆர்.என்.ரவி இந்த மாமன்றம் அனுப்புகின்ற கோப்புகளைத் திருப்பி அனுப்புவதும், கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த மாமன்றத்தில் கொடுக்கின்ற அறிக்கையை வாசிக்காமல் செல்வதும் கண்டனத்திற்குரியது. அரசு அனுப்புகின்ற கோப்புகளை ஆளுநர், ஒன்றிய அரசுக்கு அனுப்ப வேண்டும்.

ஓபிஎஸ், வானதி சீனிவாசன் அவையில் இருக்கும் போது ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்று ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ ஐயப்பன் பேசியது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து அமைச்சர் பெரியகருப்பன் சட்ட மசோதா மீண்டும் கொண்டு வந்தார். தொடர்ந்து அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

Tags : Majority ,MLA ,Governor ,R. N. Ravi ,
× RELATED எடப்பாடி சொந்த ஊரில் குழி தோண்டும் டிடிவி