தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகள் வசூலிக்கும் கட்டணங்களை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த 2009ம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட பள்ளிக் கட்டணக் கட்டுப்பாட்டு சட்டத்தில், சில திருத்தம் செய்யும் மசோதா, தமிழக சட்டசபையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. அதன்படி, பள்ளிகளுக்கு கட்டணங்களை நிர்ணயிக்க புதிய குழு அமைக்கப்படுகிறது.
இந்த குழுவில் ஓய்வு பெற்ற சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியால் நியமிக்கப்பட்டு ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி தலைவராக இருப்பார். அதில் பள்ளிக் கல்வி இயக்குனர், தனியார் பள்ளிகள் இயக்கும், தொடக்க கல்வி இயக்குனர், பொதுப்பணித்துறை (கட்டிடங்கள்) இணை தலைமை பொறியாளர், அரசால் நியமிக்க கூடிய தமிழ்நாடு மாநில பெற்றோர் – ஆசிரியர் கழகத்தின் உறுப்பினராக உள்ள பெற்றோர்,
பள்ளி கல்வித்துறையின் அரசு இணை செயலாளர் பதவிக்கு குறையாத ஒரு அலுவலர் இருப்பார். இந்த குழுவால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தின் செல்லுபடியாகும் காலம் முடிவு பெறுவதற்கு கட்டண மறு ஆய்விற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு மசோதாவில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதேபோல உள்ளாட்சிகளின் தனி அலுவலர்கள் பணியிடத்தை நீட்டிப்பது தொடர்பான சட்டத்திருத்த மசோதாவும் நிறைவேற்றப்பட்டது.
