- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- திமுக அரசு
- திராவிட மாடல் 2.0 அரசு
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- சென்னை
- கவர்னர்
சென்னை: திமுக அரசின் சாதனைகளால் தமிழ்நாடு தலைநிமிர்ந்து விட்டது. அடுத்து நாங்கள் அமைக்கப் போகும் திராவிட மாடல் 2.0 ஆட்சி எங்கள் சாதனைகளை நாங்களே விஞ்சும் அளவிற்கு இருக்கும் என்று சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். சட்டபேரவையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு பதில் அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
2021ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆறாவது முறையாக வெற்றி பெற்றபோது, ஒரு பக்கம் மகிழ்ச்சி இருந்தாலும், இன்னொரு பக்கம் எனக்குக் கவலையும் இருந்தது, அதை நான் மறைக்க விரும்பவில்லை. இந்தப் பொறுப்பை நான் எப்படிச் செய்யப் போகிறேன்? வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியுமா? மக்கள் விரும்பக்கூடிய வகையில் ஆட்சி நடத்த முடியுமா? மக்கள் மகிழ்ச்சி அடையும் வகையில ஆட்சி நடத்த முடியுமா? என்ற கவலைதான் எனக்கு இருந்தது.
முந்தைய பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு அனைத்து வகையிலும், அனைத்துத் துறைகளிலும் மிக மோசமான பின்னடைவைச் சந்தித்து, மோசமான நிலையை அடைந்திருந்தது. அதை சரி செய்தாக வேண்டும். அடுத்து, நமக்கு மேலிருக்கக்கூடிய ஒன்றிய அரசு அது ஒத்துழைக்காத, ஒரு ஓரவஞ்சனை அரசாக இருந்தது. இந்த இரண்டு நெருக்கடிகளையும் எதிர்கொள்ள வேண்டுமென்பதுதான் எனது கவலைக்கு மிக முக்கியமான காரணங்கள்.
இடியாப்பச் சிக்கல் என்று சொல்வார்களே, அப்படியான சூழலில்தான் நாங்கள் ஆட்சிக்கு வந்தோம். அதனால்தான் கவலை கொண்டவனாக நான் இருந்தேன். ஆனால், இப்போது 5 ஆண்டுகள் கடந்த நிலையில் நான் சொல்றேன்; நான் மிக மகிழ்ச்சியாக இருக்கிறேன். இன்னும் சொல்லவேண்டுமென்றால் மிக, மிக, மகிழ்ச்சியாக இருக்கின்றேன். என்னுடைய மகிழ்ச்சிக்கு காரணம் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றார்கள். என்னுடைய இலக்கில் நான் வென்றுவிட்டேன்.
திராவிட மாடல் அரசின் சாதனைகளால் தமிழ்நாடு தலைநிமிர்ந்துவிட்டது. மக்கள் மனநிறைவு அடையக்கூடிய வகையில் ஆட்சியை வழங்கிக் கொண்டிருக்கிறோம். இன்றைக்கு தமிழ்நாடு மற்ற மாநிலங்களைவிட அதிகம் வளர்ந்திருக்கிறது. இந்தியாவின் மற்ற மாநிலங்கள் எல்லாம் தமிழ்நாட்டை அண்ணாந்து பார்க்கின்றார்கள். நாங்கள் அமைக்கப் போகும் திராவிட மாடல் 2.0 ஆட்சி, எங்கள் சாதனைகளை நாங்களே விஞ்சும் அளவிற்கு இருக்கும்.
ஆட்சிப் பொறுப்பேற்றதும், நான் போட்ட முதல் கையெழுத்து மகளிருக்கான கட்டணமில்லா விடியல் பயணத்துக்குதான். இந்தப் பயணங்களால் மாதந்தோறும் 800 ரூபாய் முதல் 1200 ரூபாய் வரை ஒவ்வொரு மகளிரும் சேமிக்கின்றார்கள். இதன் மூலமாக, 2021 மே மாதத்திலிருந்து இப்பொழுது வரை தோராயமாக 60 ஆயிரம் ரூபாய் வரை சேமித்திருக்கின்றார்கள். பெண்களுக்கான மிகப்பெரிய சமூகப் பொருளாதார பலத்தை இந்தத் திட்டம் வழங்கியிருக்கிறது.
அடுத்து, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம். ஒரு கோடியே 31 லட்சம் மகளிருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்குகின்றோம். இந்தத் திட்டத்தில் இதுவரை ஒவ்வொரு மகளிருக்கும் 29 ஆயிரம் ரூபாயை கொடுத்திருக்கின்றோம். அந்தப் பெண்கள் எல்லோரும் எங்கள் அண்ணன் கொடுக்கின்ற மாதாந்திர சீர் என்று பெருமையுடன் சொல்கிறார்கள்.
இந்த ஆண்டு தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை மிகச் சிறப்பாகக் கொண்டாடுவதற்கு 2 கோடியே 23 லட்சம் குடும்பங்களுக்கு 3 ஆயிரம் ரூபாயை வழங்கினோம். தமிழ்நாடே மகிழ்ச்சியுடன் பொங்கல் திருநாளை கொண்டாடியது. தமிழ்நாடு முழுவதும் 20 லட்சத்து 59 ஆயிரம் பள்ளிக் குழந்தைகள் தினமும் காலையில் சூடான, சத்தான, சுவையான உணவை சாப்பிடுகின்றார்கள்.
நான் முதல்வன் திட்டத்தில் 48 லட்சத்து 65 ஆயிரம் பயிற்சி சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டங்களில் 12 லட்சம் மாணவ, மாணவியர் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் பெறுகிறார்கள். 2003 முதல் 2021 வரை, அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தில் 6 மாணவர்கள் மட்டுமே பயனடைந்திருக்கின்றார்கள். ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் இந்தத் திட்டத்தில் 385 மாணவர்களுக்கு 162 கோடி ரூபாய் வழங்கப்பட்டு, ஆக்ஸ்போர்டு உள்ளிட்ட உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களில் படிக்கின்றார்கள்.
அரசு ஊழியர்களுடைய 23 ஆண்டுகால கோரிக்கையான உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்திருக்கின்றோம். நாம் ஆட்சிக்கு வந்தபோது அரசு ஊழியர்களுக்கு 17 விழுக்காடாக இருந்த அகவிலைப்படியை இப்பொழுது 58 விழுக்காடு எனுமளவுக்கு உயர்த்தி வழங்கியிருக்கோம்.
2 லட்சம் விவசாயிகளுக்கு புதிய இலவச மின் இணைப்புகள்.
கடந்த 5 ஆண்டுகளில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 1 லட்சத்து 34 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டிருக்கிறது. சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளில் வென்ற 200 விளையாட்டு வீரர்களுக்கு அரசுப் பணி. கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை. மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம். சென்னையில் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம். திருச்சி பஞ்சப்பூரில் கலைஞர் ஒருங்கிணைந்த பேருந்து முனையம்.
முதல்வர் படைப்பகங்கள். 38 மாதிரிப் பள்ளிகள். 37 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள். 10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினிகள். 19 தோழி விடுதிகள். 141 மினி ஸ்டேடியங்கள். பழங்குடியினர் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த ஆயிரம் கோடி ரூபாயில் தொல்குடி திட்டம். ஆயிரம் கோடி ரூபாயில் அயோத்திதாசர் பெயரிலான ஆதிதிராவிடர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டம்.
6,045 கோடி ரூபாயில் வடசென்னை வளர்ச்சித் திட்டம் என்று சொல்லிக் கொண்டே போகலாம். இன்னும் நிறைய திட்டங்கள் இருக்கிறது. சொல்வதற்கு நேரம்தான் இல்லை. இந்த அரசைப் பொறுத்தவரைக்கும், ஒரு சாதனை செய்தால், அதை மிஞ்சுவதாக இன்னொரு சாதனை வரும்; அடுத்து அதை விஞ்சுவதாக மற்றொரு சாதனை வரும். இப்படி சாதனைக்கு மேல சாதனைகளைப் படைப்பதுதான் நம்முடைய திராவிட மாடல் அரசு. இவ்வாறு அவர் பேசினார்.
* இதுவரை 15117 கோப்புகளில்
கையெழுத்து; அரசு விழாவில் 44.44 லட்சம் பேருக்கு நல உதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “நான் பொறுப்பேற்று, இந்த அரசு பொறுப்பேற்று, இன்றோடு ஆயிரத்து 724 நாட்கள் ஆகிறது. இந்த ஆயிரத்து 724 நாட்களில், 8 ஆயிரத்து 685 நிகழ்ச்சிகளில் நான் கலந்துகொண்டிருக்கிறேன். 15 ஆயிரத்து 117 அரசு கோப்புகளில் கையெழுத்திட்டு இருக்கிறேன்;
சென்னையைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களுக்கு 173 முறை பயணம் மேற்கொண்டிருக்கிறேன். அதிலேயும், 71 மாவட்ட மாபெரும் அரசு நலத்திட்ட விழாக்களில் பங்கேற்று, 44 லட்சத்து 44 ஆயிரத்து 721 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி இருக்கிறேன். அதுமட்டுமின்றி, அடிக்கல் நாட்டியது, முடிவுற்ற திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்தது என எல்லாவற்றையும் புள்ளிவிவரத்தோடு என்னால் சொல்ல முடியும்.
கடந்த 5 ஆண்டுகளில், இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்ன செய்தான் என்றால், ஒவ்வொரு நாளும் மக்களுக்காக வாழ்ந்தான்! மக்களுக்காக திட்டங்களைத் தீட்டினான்! மொத்தமாக தமிழ்நாட்டை வளர்த்தெடுத்தான்! இவையெல்லாம் வெறும் புகழ்ச்சி இல்லை; எல்லாமே உண்மை! இதை எதிர்க்கட்சிகளால் தாங்கிகொள்ள முடியாது என்பதையும் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது” என்றார்.
