சென்னை: கோரிக்கைகளை நிறைவேற்றிடும் வகையில் அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் சங்கங்களின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர். அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றிடும் வகையில் அறிவிப்புகளை வெளியிட்டமைக்காக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று தலைமை செயலகத்தில் தமிழ்நாடு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் முன்னேற்ற சங்கம்,
தமிழ்நாடு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் நல சங்கம், தமிழ்நாடு சமூகநலத்துறை அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் ஒன்றியம், தமிழ்நாடு ஒருங்கிணைந்த சத்துணவு பணியாளர்கள் பேரவை, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம், தமிழ்நாடு சத்துணவு பணியாளர்கள் ஒன்றியம், தமிழ்நாடு சத்துணவுப் பணியாளர் நல சங்கம், தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம், தமிழ் மாநில அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம்,
அங்கன்வாடி குழந்தை பராமரிப்பு பணியாளர்கள், உதவியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் சங்கம், தமிழ்நாடு ஐசிடிஎஸ் ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம், தமிழ்நாடு ஓய்வு பெற்ற அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சத்துணவு பணியாளர்கள் சங்கம், தமிழ்நாடு சத்துணவு பணியாளர்கள் ஒன்றியம், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம்,
தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம், தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம், தமிழ்நாடு ஒருங்கிணைந்த சத்துணவு பணியாளர் நல சங்கம், தமிழ்நாடு எம்ஜிஆர். சத்துணவு பணியாளர் பேரவை, தமிழ்நாடு அரசு சத்துணவு பணியாளர் ஒன்றியம், தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் சந்தித்து, நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
இந்நிகழ்வின்போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, பி.கீதா ஜீவன், தலைமை செயலாளர் முருகானந்தம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளீதரன், சமூக நல இயக்குநர் சங்கீதா, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் குழும இயக்குநர் மெர்சி ரம்யா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
* சொல்லாததையும் செய்துள்ளார் முதல்வர்
தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் மு.வரதராஜன் அளித்த பேட்டி: இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் முதன்முறையாக கலைஞர் தான் 2008-ல் சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கினார். அந்த சாதனையின் தொடர்ச்சியாக சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம ஊராட்சி செயலர்கள் உள்பட பல்வேறு தரப்பினர்களுக்கு அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
இதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மனமார்ந்த நன்றியை எங்களது கூட்டமைப்பு தெரிவித்துக் கொள்கிறது. தேர்தல் வாக்குறுதியில் சொல்லாததையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்துள்ளார். இதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து பாராட்டு நிகழ்ச்சி சென்னையில் வரும் 31ம் தேதி நடத்த உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்
