*விவசாயிகள் ஆர்வம்
கடலூர் : கடலூர் அருகே காரைக்காடு, வழிசோதனைபாளையம், ராமாபுரம், கண்ணாரப்பேட்டை உள்ளிட்ட கிராமங்களில் விவசாயம் அதிகளவில் செய்யப்பட்டு வருகிறது. வாழை, மணிலா, நெல் மற்றும் தர்பூசணி ஆகியவை அதிகளவில் பயிரிடப்பட்டு வருகின்றன.
கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை குறைவாக பொழிந்துள்ள நிலையில் கடலூர் பகுதி விவசாயிகள் சொட்டு நீர் பாசனத்தில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். குறிப்பாக, வாழை, மணிலா பயிர்களை சொட்டு நீர் பாசன முறையில் சாகுபடி செய்து வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், சொட்டு நீர் முறையில் பாசனம் செய்யப்படும் நீரானது நேரடியாக வேர்களுக்கு அளிப்பதால் ஆவியாதல் குறைந்து, பயிரின் வேர் மண்டலத்திற்கு சீரான ஈரப்பதத்தையும், ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது. இதன் மூலம் பயிர்களின் வளர்ச்சி அதிகரிக்கிறது.
பயிர்களுக்கு மட்டுமே தண்ணீர் அளிக்கப்படுவதால், செடிகளுக்கு இடையேயான நிலம் வறண்டு விடுகின்றது. இதனால், களைகள் வளர்வது குறைகின்றது.
மேலும், இலைகள், தண்டு மற்றும் பழங்களில் நீர் படாததால் பூஞ்சை நோய்கள் மற்றும் பூச்சி தாக்குதல்கள் குறைகின்றன. நீர், உரம் மற்றும் பூச்சிக்கொல்லி பயன்பாடு குறைவதால், செலவு குறைகிறது, என்றனர்.
