×

மந்தைவெளி பேருந்து முனையத்தில் ஒருங்கிணைந்த பன்முக போக்குவரத்து – வணிக வளாகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

 

 

சென்னை: மந்தைவெளி பேருந்து முனையத்தில் அமையவுள்ள ஒருங்கிணைந்த பன்முக போக்குவரத்து – வணிக வளாகத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறையின் சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம் சார்பில் சென்னை, மந்தைவெளி பேருந்து பணிமனை மற்றும் முனையத்தில் ரூ.167 கோடியே 9 லட்சம் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த பன்முக போக்குவரத்து மற்றும் வணிக வளாகம் கட்டும் பணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார். இத்திட்டம் 6,625 சதுர மீட்டர் நிலப்பரப்பில், மொத்தம் 29,385 சதுர மீட்டர் கட்டுமானப் பரப்பளவைக் கொண்டு அமைக்கப்படவுள்ளது. மந்தைவெளி பேருந்து பணிமனை மற்றும் முனையத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சொத்து மேம்பாட்டுத் திட்டம், டவர் 1 மற்றும் டவர் 2 ஆகிய இரண்டு கோபுரங்களை கொண்டுள்ளது. இந்த இரண்டு கோபுரங்களும் இரண்டு அடித்தளங்கள், ஒரு தரைதளம் மற்றும் ஏழு மேல் தளங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.

டவர் 1 (பேருந்து பணிமனை கட்டிடம்) – இது சில்லறை வணிகத்தை மையமாகக் கொண்டு திட்டமிடப்பட்டுள்ளது. தரைதளம் சில்லறை வணிக பயன்பாட்டிற்காகவும், ஒருங்கிணைந்த மெட்ரோ நிலைய நுழைவு/வெளியேறும் கட்டமைப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. முதல் தளம் முதல் ஏழாவது தளம் வரை சில்லறை வணிக இடங்களுக்காக ஒதுக்கப்படும். டவர் 2 (முனையக் கட்டிடம்): இது ஒரு பல்நோக்கு வணிக மேம்பாட்டுத் திட்டமாகும். தரைதளத்தில் சில்லறை வணிக இடங்கள், ஒருங்கிணைந்த மெட்ரோ நிலைய நுழைவு/வெளியேறும் கட்டமைப்பு மற்றும் பேருந்து நிறுத்த வசதிகள் இடம்பெறும். முதல் தளம் முதல் ஏழாவது தளம் வரை வணிகப் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாட்டு திட்டம், மந்தைவெளி சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலைய நுழைவு மற்றும் வெளியேறும் கட்டமைப்புகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மெட்ரோ நிலையம் மற்றும் கட்டிட வசதிகளுக்கு இடையே தடையற்ற போக்குவரத்து இணைப்பு உறுதி செய்யப்படுகிறது. இத்திட்டம் சுமார் இரண்டு ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படும்.

அதேபோல், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் ரூ.60 கோடி மதிப்பீட்டில் ராஜீவ் காந்தி சாலை ஒக்கியம் மடுவில் புதியதாக கட்டப்பட்டுள்ள நான்கு வழி சாலைப்பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர், தலைமை செயலாளர் முருகானந்தம், சிறப்பு முயற்சிகள் துறை அரசு கூடுதல் தலைமைச்செயலாளர் கோபால், போக்குவரத்து துறை அரசு முதன்மைச்செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குநர் சித்திக், மாநகர் போக்குவரத்து கழகம் மேலாண்மை இயக்குநர் பிரபு சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

Tags : Integrated Multimodal Transport ,Complex ,Pastaiweli Bus Terminal ,Principal ,Mu. K. Stalin ,Chennai ,Chief Minister ,Integrated Multimodal Transport and Commercial Complex ,Mandaiveli Bus Terminal ,K. Stalin ,Metro ,Department of Planning, Development and Special Initiatives ,Secretariat ,
× RELATED பெரும்பாலான கட்சிகள் கூட்டணிக்கு...