சென்னை: தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எடப்பாடி பழனிசாமி தலைவர் என்று ஒன்றிய அமைச்சரும் பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் கூறியுள்ளார். மேலும் பெரும்பாலான கட்சிகள் கூட்டணிக்கு வராதநிலையில், இன்று ஒன்றிய அமைச்சருக்கு எடப்பாடி தனது வீட்டில் விருந்தளித்தார். இந்த விருந்தை டிடிவி தினகரன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் புறக்கணித்தனர். தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் அடுத்த சில மாதங்களில் வரவுள்ள நிலையில் தமிழக அரசியல் களம் சூடுப்பிடிக்க தொடங்கியுள்ளது. அதிமுகவில் அன்புமணி தரப்பிலான பாமக கூட்டணியை இறுதி செய்தது. இந்த நிலையில் பிரதமர் மோடி நாளை தமிழகம் வரவுள்ள நிலையில் மதுராந்தகத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ஒரே மேடையில் கூட்டணி கட்சியினரை அறிமுகப்படுத்த அனைத்து பணிகளையும் மேற்கொள்வதற்காக மூன்று நாள் பயணமாக பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளரும் ஒன்றிய அமைச்சருமான பியூஷ் கோயல் சென்னை வந்துள்ளார்.
தொடர்ந்து அவர் நடத்திய பேச்சுவார்த்தை காரணமாக என்.டி.ஏ கூட்டணியில் டிடிவி தினகரனின் அமமுக கட்சி நேற்று இணைந்தது. மேலும், ஐஜேகே, தமாகா, ஜான் பாண்டியன், ஏசி சண்முகம் ஆகியோருடனும் தொகுதி உடன்பாடு தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தேமுதிக இன்னும் யாருடன் கூட்டணி என்பது பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை. இந்தநிலையில், பசுமை வழிச்சாலையில் உள்ள தனது வீட்டில் எடப்பாடி பழனிசாமி இன்று காலை ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு விருந்து அளித்தார். இதில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன், மூத்த நிர்வாகிகளான வானதி சீனிவாசன், எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், சுதாகர் ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர். அதிமுக தரப்பில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்த விருந்தில் டிடிவி தினகரன், அன்புமணி உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பங்கேற்பதாக இருந்தது. ஆனால் ராமதாஸ், பிரேமலதா உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் பிடி கொடுக்காததால், ஒன்றிய அமைச்சருக்கு மட்டும் தனது வீட்டில் விருந்தளிப்பது என்று முடிவு எடுக்கப்பட்டது.
காலை உணவுக்குப் பிறகு நிருபர்களிடம் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் மற்றும் அவருடன் பாஜக மூத்த நிர்வாகிகள் எனது இல்லத்தில் நடைபெற்ற விருந்தில் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. விருந்தில் பங்கேற்று சிறப்பித்தமைக்கு நன்றி. பிரதமர் நாளை கலந்துகொள்ள உள்ள பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினோம். நாளை நடைபெறும் கூட்டம் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் கூட்டமாக அமையும். சுமார் ஐந்து லட்சம் பேர் பங்கேற்கின்றனர். இந்த தொடக்கம் எங்களின் வெற்றிக்கு அச்சாணியாக இருக்கும் என்பதில் மாற்றுகருத்தில்லை. இந்தியா எதிர்காலத்தில் வல்லரசு நாடாக மாறுவதற்கான முயற்சிகளை பிரதமர் மோடி எடுத்து வருகின்றார். அதிமுக – என்.டி.ஏ கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும். அப்போது தமிழகம் மிகப்பெரிய எழுச்சியை பெறும்.
இவ்வாறு அவர்பேசினார். தொடர்ந்து நிருபர்களிடம் பியூஷ்கோயல் கூறியதாவது: என்னுடைய நீண்டகால நண்பரான எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அவர் அளித்த விருந்தில் கலந்து கொண்டது மகிழ்ச்சி. தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்திற்கான சிறந்த எதிர்கால வளர்ச்சியை கொண்டு வரும். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தேசிய அளவில் மோடியும், தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமியும் தலைவர்களாக இருப்பார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
