ஜெயங்கொண்டம், ஜன.21: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கல்லாத்தூர் பேருந்து நிறுத்தம் அருகே இயங்கி வரும் ஏடிஎம்ல் கடந்த 15 ம் தேதி அன்று மாலை 4 மணியளவில் வடவீக்கம் கிராமத்தைச் சேர்ந்த அன்புச்செல்வன் (65) என்பவர் பணம் எடுக்கச் சென்றுள்ளார். அப்போது, ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து தன்னிச்சையாக ரூ 72 ஆயிரத்து 300 பணம் வெளியே வந்துள்ளது. இதைப் பார்த்த அன்புச்செல்வன் பணத்தை எடுத்துக்கொண்டு ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.
இதனை அடுத்து ஜெயங்கொண்டம் காவல் ஆய்வாளர் பாலாஜி உரிய விசாரணை மேற்கொண்ட பின்னர் கல்லாத்தூர் பேருந்து நிலையத்தில் செயல்படும் ஏடிஎம் மையத்தை நிர்வகிக்கும் பொறுப்பாளர் தேன்மொழி என்பவரிடம் பணத்தை ஒப்படைத்தார். இதனைத் தொடர்ந்து நேற்று அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் எஸ்.பி விஷ்வேஷ் பா.சாஸ்திரி, அன்புச்செல்வனின் நேர்மையை பாராட்டி 10 கிராம் வெள்ளி நாணயத்தை வழங்கினார். இந்நிகழ்வின் போது ஜெயங்கொண்டம் காவல் ஆய்வாளர் பாலாஜி மற்றும் தலைமை காவலர் விஜயகுமார் உடன் இருந்தனர்.
