திருப்பூர்: கணவனை தவிக்க விட்டு இன்ஸ்டா காதலனுடன் ஓட்டம் பிடித்த மகளை, கழுத்தை அறுத்து கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டம், ஏழுமலையை சேர்ந்தவர் சிம்யா (23). இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூரை சேர்ந்த பிரேம்குமார் (27) என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
தனது வீட்டின் அருகிலேயே மகள் இருக்க வேண்டுமென நினைத்த சிம்யாவின் தந்தை ஆறுமுகம் (50), சிம்யா குடும்பத்தை திருப்பூரில் உள்ள முருகம்பாளையம் அடுத்த பாறைக்காடு பகுதியில் தனியாக வீடு எடுத்து கொடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து, சிம்யாவின் கணவன் பிரேம்குமார் அங்குள்ள டையிங் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். குடிப்பழகத்திற்கு அடிமையான பிரேம்குமார், தினமும் அதிகளவில் மது குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில், சிம்யாவிற்கு இன்ஸ்டாகிராம் மூலம் கன்னியாகுமரியை சேர்ந்த பிரவீன்குமார் (25) என்பவர் அறிமுகமானார். இருவரும் செல்போனில் அடிக்கடி பேசி வந்துள்ளனர். அந்த பழக்கம், நாளடையில் கள்ளக்காதலாக மாறியது. இதைத்தொடர்ந்து இன்ஸ்டா காதலன் பிரவீன்குமார் சிம்யாவிடம், ‘‘குடிகார கணவருடன் வாழ்க்கை நடத்தி சிரமப்பட வேண்டாம்.
மகளுடன் கன்னியாகுமரி வந்தால் நாம் இருவரும் நல்ல படியாக சேர்ந்து வாழலாம்’’ என ஆசை வார்த்தை கூறி அழைத்துள்ளார். கள்ளக்காதலனின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு சிம்யா கடந்த 2ம் தேதி தனது மகளுடன் கன்னியாகுமரி சென்றுள்ளார். தொடர்ந்து தனது மனைவி சிம்யா மற்றும் 3 வயது மகளை காணவில்லை என சிம்யாவின் கணவர் பிரேம்குமார் கடந்த 4ம் தேதி வீரபாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில், வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கன்னியாகுமரியில் இருந்த சிம்யா மற்றும் அவரது மகளை மீட்டு நேற்று முன்தினம் பெற்றோர் மற்றும் கணவரிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில், நேற்று மதியம் 12.30 மணியளவில் ஆறுமுகம் வீட்டில் இருந்துள்ளார். அப்போது, மகளிடன் ‘‘கட்டிய கணவனை விட்டுவிட்டு ஏன் இப்படி வேறு ஒருவருடன் சென்றாய்’’ எனக்கேட்டுள்ளார். இது, தந்தை, மகள் இடையே தகராறாக மாறியது. இதில், ஆத்திரமடைந்த ஆறுமுகம் வீட்டில் இருந்த கத்தியால் மகள் சிம்யாவின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துவிட்டு, வீட்டிலேயே அமர்ந்து அழுது கொண்டிருந்தார்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த சிம்யாவின் உடலை பார்த்து அவரது தாய் மற்றும் அக்கம்பக்கத்தினர் கதறி அழுதனர். தொடர்ந்து, வீரபாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிம்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, ஆறுமுகத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
