செய்யூர், ஜன.22: செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் பகுதியில் நான்குமுனை சந்திப்பு பகுதி அமைந்துள்ளது. தினமும் பல்வேறு பகுதிகளுக்குச் செல்ல ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இப்பகுதியில் கூடுகின்றனர். அதிக பொதுமக்கள் கூடும் இந்த முக்கிய பகுதியில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் அனைவரும் அவசர காலங்களில் இயற்கை உபாதை கழிக்க முடியாமல் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இப்பகுதியில் பொது கழிப்பறை கட்டிடம் கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு உள்ளது. எனவே, பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு இப்பகுதியில் பொது கழிப்பறை கட்டித்தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
