×

திருப்போரூர் – நெம்மேலி சாலையில் கடல்நீரை குடிநீராக்கும் திட்ட குழாய் பதிப்பு பணிகள் தீவிரம்

 

திருப்போரூர், மார்ச் 9: திருப்போரூர் – நெம்மேலி சாலையில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கான குழாய் பதிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக சாலை மூடப்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பழைய மாமல்லபுரம் சாலையையும், கிழக்கு கடற்கரை சாலையையும் இணைக்கும் வகையில் திருப்போரூரில் இருந்து நெம்மேலி வரை 4 கி.மீ. தூர இணைப்பு சாலை உள்ளது. இந்த சாலையின் நடுவே பக்கிங்காம் கால்வாய் மற்றும் பாலம் உள்ளது.

தற்போது நெம்மேலி பகுதியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் இரண்டாம் திட்டப்பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ராட்சத குழாய்கள் புதைக்கப்பட்டு போரூர் ஏரிக்கு கொண்டு செல்லப்படுகின்றன. பழைய மாமல்லபுரம் சாலையின் புறவழிச்சாலையில் இப்பணிகள் முடிவடைந்துவிட்ட நிலையில் தற்போது நெம்மேலி இணைப்பு சாலையில் குழாய்களை புைதக்கும் பணிகள் தொடங்கி உள்ளன.

இதன் காரணமாக ராட்சத கிரேன்கள் மூலம் குழாய்கள் கொண்டு வரப்பட்டு பிரமாண்ட பள்ளங்களில் புதைக்கப்படுகின்றன. இப்பணி இரவு பகலாக நடைபெறுவதால் திருப்போரூரில் இருந்து நெம்மேலி செல்லும் சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக மோட்டார் சைக்கிள் மற்றும் கார், வேன், பள்ளி வாகனங்கள் அனைத்தும் சுற்றிக்கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. விரைவில் குழாய்கள் புதைக்கும் பணியை முடித்து சாலையை போக்குவரத்துக்கு திறந்து விட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. மேலும், குழாய் புதைக்கும் பணிக்காக கனரக வாகனங்கள் இச்சாலையில் பயணித்து, சாலை முற்றிலும் சேதமடைந்து விட்டதால் புதிய சாலை அமைத்து தரவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Thiruporur-Nemmeli road ,Thiruporur ,Old Mamallapuram Road ,East Coast Road… ,
× RELATED பக்கிங்காம் கால்வாய் அருகே குப்பை கொட்டிய வாகனத்துக்கு அபராதம்