×

மாமல்லபுரம், சதுரங்கப்பட்டினம் கடற்கரையில் மாசி மக தீர்த்தவாரி உற்சவ விழா: ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்

மாமல்லபுரம், மார்ச்.4: மாமல்லபுரம், சதுரங்கப்பட்டினத்தில் நடந்த மாசிமக தீர்த்தவாரி உற்சவ விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். உலக புகழ்பெற்ற கடற்கரை நகரமான மாமல்லபுரத்தில் உள்ள தலசயன பெருமாள் கோயில் சார்பில், ஆண்டுதோறும் மாசி மகத்தன்று கடற்கரையில் தீர்த்தவாரி உற்சவம் நடத்தப்படுவது வழக்கம். இந்தாண்டு மாசி மகத்தை முன்னிட்டு நேற்று காலை தலசயன பெருமாள், ஆதிவராக பெருமாளுடன் கருட வாகனத்தில் எழுந்தருளி, ராஜ வீதிகள் வழியாக கடற்கரைக்கு வந்தனர். பின்னர், கடலில் புனித நீராட்டினர். இதைத்தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் இறங்கி புனித நீராடினர்.

இதேபோல் இருளர் இனமக்கள், தங்கள் குலதெய்வமான கன்னியம்மனை வழிபடுவதற்காக தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து 2 நாட்களுக்கு முன்பே மாமல்லபுரம் வந்து கடற்கரையில் தற்காலிக குடில்கள் அமைத்து தங்கினர். இதையடுத்து, இருளர்கள் நேற்று அதிகாலை எழுந்து கடலில் புனித நீராடிவிட்டு மணலில் செய்த கன்னியம்மன், கடல் கன்னி, சப்த கன்னிகளை வழிபட்டனர். இதைத்தொடர்ந்து, கன்னியம்மனிடம் குறிகேட்டு ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள், திருமண நிச்சயதார்த்தம், காது குத்துதல், மஞ்சள் நீராட்டு விழா உள்ளிட்ட பல்வேறு சுபநிகழ்ச்சிகளை செய்து வழிபட்டனர்.

பவுர்ணமி நாளில் கடலில் நீராடுவதால் வருடத்தின் 365 நாட்களும் நீராடிய காசி, ராமேஷ்வரம் சென்று வந்த பலன் கிடைக்கும். பெருமாளே கடலில் இறங்கி நீராடும் மாசி மக நன்னாளில் பெருமாள் குளித்த கடலில் நீராடினால் நண்மை உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதையடுத்து ஏராளமான பக்தர்கள் கடலில் நீராடி வழிபாடு நடத்தினர். இதேபோல் மாசிமக திருவிழாவை முன்னிட்டு கல்பாக்கம் அடுத்த சதுரங்கபட்டினம் கடற்கரையிலும் நேற்று தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்ரது. இதில் கல்பாக்கம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பல்வேறு கோயில்களில் உள்ள சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் சதுரங்கப்பட்டினம் கடற்கரையில் எழுந்தருளினர். இந்த தீர்த்தவாரி உற்சவத்தைக் காண சுற்று வட்டாரத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கடற்கடையில் குவிந்தனர்.

Tags : Masi Maha Theerthavari Utsava festival ,Chathurangapattinam beach ,Mamallapuram ,Thalasayana Perumal Temple ,Masi Maha Theerthavari festival ,
× RELATED திருப்போரூர் மாமல்லபுரம் கோயில்களில்...