செய்யூர், ஜன.22: செங்கல்பட்டு மாவட்டம், சூனாம்பேடு பகுதியில் பேருந்து நிலையம் உள்ளது. புதுச்சேரி, தாம்பரம், மதுராந்தகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இந்த பேருந்து நிலையத்தில் நின்று பயணிகளை ஏற்றிச் செல்கின்றன. மேலும், சூனாம்பேடு பெரிய ஊராட்சி என்பதாலும், அதிக மக்கள் இருப்பதாலும் இந்த பேருந்து நிலையம் எப்போதும் பயணிகள் நிறைந்து காணப்படும். இந்த பேருந்து நிலையத்தை சுற்றி 50க்கும் மேற்பட்ட சிறு குறு கடைகள், வணிக வளாகங்கள் உள்ளன. இப்பகுதியில் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான உயர் கோபுர மின் விளக்கு, குடிநீர் வசதி ஏற்படுத்தி தரப்படவில்லை. இதனால், இரவு நேரங்களில் பேருந்து நிலையம் இருளில் மூழ்கி காணப்படுகிறது. மேலும், பயணிகள் மற்றும் பொதுமக்கள் குடிநீர் தேடி அலையும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு, இந்த பேருந்து நிலையத்தில் சோலாருடன் கூடிய உயர் கோபுர மின் விளக்கு அமைத்து, இங்கு ஆர்ஓ குடிநீர் திட்டம் கொண்டு வர மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
