பதேபூர்: உத்தர பிரதேசத்தில் பெண் தோழியுடனான ஓரினச் சேர்க்கை காதலை கண்டித்த விவசாயியை, கூலிப்படை வைத்து மனைவியே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டத்தில் உள்ள திகார் கிராம் என்ற கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சுமர் சிங் (45) என்பவரின் மனைவி ரேணு தேவி (35). இவர்களின் அண்டை வீட்டில் வசித்து வருபவர் மாலதி தேவி (37). கணவரை இழந்த இவருக்கு 9 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் ரேணு தேவிக்கும், மாலதி தேவிக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டு ஓரினச் சேர்க்கையாளர்களாக மாறி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
இதுதொடர்பான அன்பை வெளிப்படுத்த ரேணுவின் பெயரை மாலதி தனது கையில் பச்சைக் குத்தியுள்ளார். இதுகுறித்து சுமர் சிங்கிற்கு தெரியவந்ததும், மாலதி தேவியை தனது வீட்டிற்குள் வரக்கூடாது என்று தடுத்துள்ளார். மேலும் தனது மனைவியை அந்தப் பெண்ணுடனான தொடர்பை கைவிடுமாறு கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இருவரும் தடையின்றி ஒன்றாக வாழ்வதற்காக சுமர் சிங்கை கொலை செய்ய முடிவு செய்தனர். இதற்காக ஜிதேந்திரா என்ற நபர் மூலம் 60 ஆயிரம் ரூபாய்க்கு கூலிப்படையை ஏற்பாடு செய்தனர். முன்பணமாக 8 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளனர். சந்தேகம் வராமல் இருக்க மாலதி கொடுத்த ரகசிய செல்போன் மூலம் இருவரும் பேசி வந்துள்ளனர்.
கடந்த 14ம் தேதி சுமர் சிங் வயலுக்குச் சென்றபோது, அங்கு மறைந்திருந்த கூலிப்படையினர் அவரது கழுத்தை துணியால் நெரித்தும், அறுத்தும் கொடூரமாக கொலை செய்தனர். வயல்வெளியில் சடலமாக மீட்கப்பட்ட சுமர் சிங் மரணம் குறித்து போலீசார் விசாரித்தபோது மனைவி மற்றும் தோழியின் நாடகம் அம்பலமானது. இதுகுறித்து கூடுதல் எஸ்பி மகேந்திர பால் சிங் கூறுகையில், ‘கொலைக்கு காரணமான மனைவி ரேணு, அவரது தோழி மாலதி மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த ராஜூ சோங்கர் ஆகிய 3 பேரை கைது செய்துள்ளோம். தலைமறைவாக உள்ள ஜிதேந்திர குப்தா மற்றும் ராம் பிரகாஷ் ஆகியோரை தேடி வருகிறோம்’ என்று தெரிவித்தார்.
