சென்னை: விருகம்பாக்கம் பகுதியில் வாட்ஸ் அப் குழு அமைத்து பாலியல் தொழில் செய்து வந்த புரோக்கரை விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். சென்னை பெருநகர காவல் எல்லையில் இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்யும் நபர்கள் மற்றும் புரோக்கர்களை போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ராதிகா தலைமையிலான விபச்சார தடுப்பு பிரிவு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் விருகம்பாக்கம் சாலிகிராமம் எஸ்பிஐ காலனி 2வது ெதருவில் உள்ள ஒரு வீட்டில் சந்தேகத்திற்கு இடமான வகையில் பலர் வந்து செல்வதாக விபச்சார தடுப்பு பிரிவு உதவி கமிஷனர் யாஸ்மினுக்கு பொதுமக்களிடம் இருந்து புகார் வந்தது. அதன்படி விபச்சார தடுப்பு பிரிவு -1 இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி தலைமையிலான குழுவினர் நேற்று அப்பகுதியில் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர்.
அப்போது சிலர் சம்பந்தப்பட்ட வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றது தெரியவந்தது. உடனே போலீசார் அதிரடியாக அந்த வீட்டிற்குள் புகுந்து சோதனை செய்த போது, விருகம்பாக்கம் ஆற்காடு சாலையை சேர்ந்த பழைய பாலியல் புரோக்கர் சீனிவாசன்(55) என்பவர், வீடு வாடகைக்கு எடுத்து, தனது பழைய வாடிக்கையாளர்களுக்கு என தனியாக வாட்ஸ் அப் குழு அமைத்து பாலியல் தொழில் செய்து வந்தது தெரியவந்தது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வளசரவாக்கம் போலீசார் இவரை கைது செய்து சிறையில் அடைத்ததும் தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் அதிரடியாக சீனிவாசனை கைது செய்தனர். அவரிடம் இருந்து பாலியல் தொழிலுக்கு பயன்படுத்திய இளம் பெண் ஒருவர் மீட்கப்பட்டார். வாடிக்கையாளரை பிடிக்க பயன்படுத்திய செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது.
