உடுமலை, ஜன. 21: தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தில் இணைந்துள்ள தமிழ்நாடு கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் உடுமலை வட்டாட்சியரிடம் நேற்று மனு அளிக்கப்பட்டது.மனுவில் கூறியிருப்பதாவது: ஒரு கிலோ கறிக்கோழி வளர்ப்புக்கு குறைந்த பட்ச கூலியாக ரூ.6.50 மட்டுமே தரப்படுகிறது. பல ஆண்டுகளாக வளர்ப்பு கூலி உயர்த்தப்பட வில்லை. பண்ணை வைத்துள்ள விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகிறார்கள். ஆனால் நிறுவனங்கள் நல்ல லாபம் ஈட்டுகின்றன.
நிறுவனங்களின் விவசாய விரோத நடவடிக்கைகளை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. கம்பெனிகள், பண்ணைகள் நடத்தும் விவசாயிகளுக்கு கறிக்கோழி வளர்ப்பு கூலியாக கிலோவிற்கு ரூ.20 வழங்க வேண்டும். ஆண்டுதோறும் முத்தரப்பு கூட்டங்களை அரசு நடத்தி கூலி உட்பட இதர விஷயங்களுக்கு தீர்வு காண வேண்டும்.தமிழகம் முழுவதும் 4 லட்சம் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளதால் அவர்களை பாதுகாத்திட அரசு நல வாரியம் அமைக்க வேண்டும்.கோழி பண்ணைகளுக்கு இன்சூரன்ஸ்,இலவச மின்சாரம், வங்கிகள் மூலம் மானிய கடன் வசதிகள் செய்து தர வேண்டும். கம்பெனிகள் தரமான கோழிக்குஞ்சுகள் வழங்கவும், உரிய காலத்தில் எடுத்துச் செல்லவும், உடனடியாக தொகை பட்டுவாடா செய்யவும் உத்தரவாதம் அளிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.
