×

செம்மஞ்சேரியில் உலக தரத்தில் ரூ.261 கோடியில் விளையாட்டு நகரம்

சோழிங்கநல்லூர், ஜன.21: செம்மஞ்சேரியில் ரூ.261 கோடியில் உலக தரத்திலான விளையாட்டு நகரம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது, என்று ஆளுநர் உரையில் கூறப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ஒரு ஆட்டம் சென்னையில் நடக்கும். அதற்கே தமிழகம் அமர்க்களப்படும். ஆனால், இன்றைக்கு சர்வதேச விளையாட்டுப் போட்டிகளை ஏற்று நடத்துமளவுக்கு தமிழ்நாடு அபரிதமான வளர்ச்சியை கண்டுள்ளது. உலக விளையாட்டு அரங்கில் தமிழ்நாட்டின் பெயர் உரக்க ஒலிப்பதற்கு தமிழக அரசே முக்கிய காரணம். குறிப்பாக, விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பின், சர்வதேச போட்டிகள் அதிகம் நடக்க துவங்கியுள்ளது. செஸ், டென்னிஸ், பார்முலா – 4 கார் பந்தயம், உலக ஜூனியர் ஆண்கள் ஹாக்கி தொடர் என பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டின் சாதனையில் மற்றொரு மைல் கல் எனலாம்.

திமுக அரசு 2021, மே 7ம் தேதி பொறுப்பேற்றதில் இருந்து கல்வி, விளையாட்டிற்கு முக்கியத்துவம் தந்து வருகிறது. திறமையான வீரர்கள் எங்கிருந்தாலும் கண்டறிவது, அவர்களுக்கான விளையாட்டு கட்டமைப்பை மேம்படுத்தி, அறிவியல் பூர்வமாக அவர்களை தயார் செய்தல் என்று அடுத்தடுத்த இலக்கை நோக்கி தமிழக விளையாட்டுத் துறை முன்னேறி வருகிறது. அதேபோல், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் மினி ஸ்டேடியம் அமைக்கும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. திறமையிருந்தும் மேலே வர முடியாத ஏராளமான வீரர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு பயிற்சி தந்து பட்டை தீட்டி வருகிறது தமிழ்நாடு விளையாட்டுத்துறை.

இதேபோல், 28 புதிய விளையாட்டு வளாகங்கள், பல்நோக்கு விளையாட்டு மையங்கள், உயர்நிலை பயிற்சி மையங்கள், ஹாக்கி மைதானங்கள், சர்வதேச தர உள்விளையாட்டு அரங்குகள் உருவாக்கப்பட்டுள்ளன. 11 மாவட்டங்களில் புதிய அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக 300க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித் தொகையும் வழங்கப்படுகிறது. தமிழக வீரர்களின் விளையாட்டுத்திறனை மேமம்படுத்த, சென்னை செம்மஞ்சேரியில் 112.12 ஏக்கர் பரப்பளவில் ரூ.261 கோடி மதிப்பீட்டில் சர்வதேச விளையாட்டு நகரத்தை அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் வழங்கியுள்ளார். இந்த நகரத்தில் ஒலிம்பிக் தர மைதானங்கள், நீர் விளையாட்டுக்களுக்கான ஏரி உள்ளிட்டவை அமைகிறது.

ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்லும் அளவுக்கு வீரர்களை முறையான பயிற்சி அளித்து உருவாக்குவது தான் இதன் நோக்கம். 2 ஆண்டுகளுக்குள் கட்டுமான பணிகளை முடித்து 2027ம் ஆண்டில் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் பணிகள் துவங்கவுள்ளன. இதன்மூலம் தமிழ்நாடு சர்வதேச அரங்கில் தவிர்க்க முடியாத இடத்தை பிடிக்கும். இந்நிலையில் பேரவையில் நேற்று ஆளுநர் உரையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் திறமை வாயந்த விளையாட்டு வீரர்களை அடையாளம் காணவும், அவ்வாறு தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு தேவையான களத்தை அமைத்து தருவதிலும், பயிற்சி தருவதிலும் அரசு ஆர்வத்துடன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, உள்ளூர் அளவிலான விளையாட்டு வீரர்கள், மாநில மற்றும் தேசிய, உலக அளவிலும் வெற்றி பெறத் தேவையான அனைத்து முயற்சிகளும் முழு மூச்சுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, செயற்கை இழை ஓடுபாதைகள், விளையாட்டு அரங்கங்கள், நீச்சல் குளங்கள், தரமான புதிய விளையாட்டு வளாகங்கள் மற்றும் ஒலிம்பிக் அகாடமிகள் போன்றவை உருவாக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள நவீன அரங்கங்கள் சர்வதேச தரத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில் உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் ஒருங்கிணைந்த விளையாட்டு அறிவியல் மைங்களை அமைத்துள்ளது. தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் ஆடுகள் செயலி, டாக்டர் கலைஞர் விளையாட்டு தொகுப்புகள் வழங்குதல், தமிழ்நாடு வாகையர் அறக்கட்டளை போன்ற முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சென்னை செம்மஞ்சேரியில் உலக தரத்திலான விளையாட்டு நகரத்தினை ரூ.261 கோடி மதிப்பீட்டில் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மாணவர்கள் தனித்திறமை வளர்க்க
ஆண்டுதோறும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு ஓட்டம் முதல் பளுதூக்குதல் வரையிலான 24 வகையான போட்டிகளும், மாற்றுத்திறனாளிகளும் விளையாடாமல் இருந்து விடக் கூடாது என்பதற்காக 8 விதமான போட்டிகளும், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் தனித்தனி போட்டிகள் நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் 25க்கும் அதிகமான போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். 14 நாட்கள் நடந்த 9 ஆயிரத்திற்கும் அதிகமான போட்டிகளில் 300க்கும் மேற்பட்டோர் தங்க பதக்கம் பெற்றுள்ளனர். இந்தாண்டுக்கான போட்டியில் சென்னை மாவட்டம் 109 தங்கம், 90 வெள்ளி, 82 வெண்கலத்துடன் முதலிடத்தையும், செங்கல்பட்டு 2ம் இடமும், கோவை 3ம் இடமும், சேலம் 4ம் இடமும், திண்டுக்கல் 5ம் இடமும், தூத்துக்குடி மற்றும் மதுரை அடுத்தடுத்த இடத்தையும் பிடித்துள்ளன. இந்த போட்டிகளில் சுமார் ரூ.37 கோடி பரிசுத் தொகையாக வழங்கப்பட்டுள்ளன.

சிறந்த வீரர்கள் ஊக்குவிப்பு
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஊக்கத்தால், வீடுகளில் முடங்கி கிடந்த வீரர், வீராங்கனைகள் வெளி உலகத்துக்கு வந்து தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்து வருகின்றனர். அந்த வகையில், சமீபத்தில் ஆசிய இளையோர் கபடி போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணியில் இடம் பிடித்த சென்னை கண்ணகி நகரை சேர்ந்த கார்த்திகாவுக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கி துணை முதல்வர் பாராட்டினார். இதன் மூலம் சென்னை கண்ணகி நகர் மீது இருந்த பொதுவான கண்ணோட்டம் மாறியது. இதேபோல், ஆசிய இளையோர் போட்டியில் பதக்கம் வென்று தமிழகம் திரும்பியவர்களுக்கு தமிழக அரசு சார்பில் சிறப்பு நிதியுதவி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : Chemmancherry ,Sholinganallur ,Governor ,World Cup cricket ,Chennai ,Tamil Nadu ,
× RELATED சம்பள பாக்கியை கேட்ட டிரைவர் கொலை...