மேட்டுப்பாளையம்: கோத்தகிரி சாலையை குட்டிகளுடன் கூட்டமாக கடந்த யானைகளால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். கோவை மாவட்டம் சிறுமுகை வனப்பகுதியில் இருந்து மேட்டுப்பாளையம் வனப்பகுதிக்கு உணவு மற்றும் தண்ணீரை தேடி பரபரப்பான கோத்தகிரி சாலையை யானைகள் கடந்து சென்று வருவது வழக்கம்.
நேற்று மாலை பரபரப்பான ஊட்டி சாலையில் போக்குவரத்துக்கு இடையே குட்டிகளுடன் கூடிய காட்டு யானைகள் கூட்டம் சிறுமுகை வனப்பகுதியில் இருந்து வெளியேறி சாலையை கடக்க முற்பட்டன.இதனை கண்ட வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை ஆங்காங்கே நிறுத்திவிட்டு இது குறித்து மேட்டுப்பாளையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த வனத்துறையினர் சாலையின் இரு புறமும் வாகனங்களை நிறுத்திவிட்டு காட்டு யானைகள் சாலையை கடக்க வழிவகை செய்தனர்.
இதையடுத்து காட்டு யானைகள் சாலையை கடந்து சாவகாசமாக சென்றன. அதன்பின்னர் வாகன போக்குவரத்து துவங்கியது. நீண்ட நாட்களுக்கு பிறகு கோத்தகிரி சாலையை காட்டு யானைகள் கூட்டம் கடந்து சென்ற நிகழ்வை வாகன ஓட்டிகள் தங்களது செல்போன்களில் வீடியோவாக பதிவிட்டு அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
