திருவனந்தபுரம்: வரும் சட்டப்பேரவை தேர்தலில் கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் என்று எர்ணாகுளத்தில் நடந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசினார். கேரளாவில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. மாநகராட்சிகள், நகரசபைகள், மாவட்ட, கிராம மற்றும் பிளாக் பஞ்சாயத்துகளில் காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றியது. இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கூட்டணி கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களை சந்திப்பதற்காக நேற்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேரளா வந்தார்.
எர்ணாகுளத்தில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியது: உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெற்றி விரைவில் வரவுள்ள சட்டப்பேரவை தேர்தலிலும் தொடரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. சட்டப்பேரவை தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்பது உறுதியாகும். காங்கிரஸ் கூட்டணி கேரள மக்களுடன் ஒன்றிணைந்து செயல்படும். மக்களின் குரலுக்கு காங்கிரஸ் செவிசாய்க்கும். அனைத்து மக்களின் பிரச்னைகளையும் காங்கிரஸ் தீர்த்து வைக்கும். வேலை இல்லாததால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கேரளாவை விட்டு வெளியேறி வருகின்றனர். கேரளாவில் உள்ளவர்கள் வேலை தேடி வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் செல்வது ஒரு தொடர்கதையாக கூடாது. பாஜவும், ஆர்எஸ்எஸ்சும் மக்களின் எந்தப் பிரச்னைகளையும் கண்டுகொள்வது கிடையாது. இந்தியாவின் சொத்தும், புகழும் ஒரு சிலரிடம் மட்டுமே இருக்க வேண்டும் என்று தான் அவர்கள் விரும்புகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.
