×

வேலூர் குடியிருப்பில் அமலாக்கதுறை ரெய்டு சிஎம்சி டாக்டர் அறையில் சிக்கியது அமெரிக்காவின் போதை பொருட்கள்: பெண்ணுக்கு ரூ.2 லட்சம் அனுப்பியது குறித்தும் விசாரணை

வேலூர்: வேலூரில் சிஎம்சி டாக்டர் அறையில் அமலாக்கதுறை சோதனையின்போது பறிமுதல் செய்தது அமெரிக்காவில் பயன்படுத்தும் 5 வகையான போதை பொருள் என்பதும், இதற்காக ரூ.2 லட்சத்தை பெண் ஒருவருக்கு அனுப்பியதும் தெரிய வந்துள்ளது. இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் முதுநிலை அறுவை சிகிச்சையாளராக கேரளாவைச் சேர்ந்த டாக்டர் பிளிங்கின் பணியாற்றி வருகிறார். இவர் வேலூர் தோட்டப்பாளையம் பிள்ளையார் கோயில் தெருவில், சிஎம்சி ஆண் டாக்டர்களுக்கான அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் தங்கியுள்ளார்.

கடந்த 16ம் தேதி அவரது அறையை அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, அறையில் இருந்து 5 வகையான வெளிநாட்டு போதைப் பொருட்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக கடந்த 17ம் தேதி வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் புகார் அளித்தனர். அதன்பேரில் டாக்டர் பிளிங்கின் மீது போதைப் பொருள் ஒழிப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிந்து, தலைமறைவான அவரை பிடிக்க 2 தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது: வேலூர் சிஎம்சி டாக்டர் பிளிங்கின் வங்கிக்கணக்கிலிருந்து ரூ.2 லட்சம் போதைப் பொருள் விற்பனை செய்யும் பெண்ணின் வங்கிக்கணக்கிற்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனை சென்னையில் உள்ள அமலாக்கத்துறையின் சட்டவிரோத பணப்பரிமாற்றப் பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். அதனால்தான் டாக்டர் அறையை ஈடி அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் 5 விதமான போதைப்பொருள், கஞ்சா, போதை மாத்திரை பவுடர், போதை காளான் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவற்றின் மதிப்பை கண்டறிய முடியவில்லை. டாக்டரை கைது செய்தால் தான் மற்ற விவரங்கள் எல்லாம் தெரியவரும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Enforcement Directorate ,CMC ,Vellore ,US ,
× RELATED திருமணம் செய்ய மறுத்தவரை கைது செய்ய...